For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பூச்சிகளின் ஆச்சரியங்கள்!

08:05 PM Jun 20, 2025 IST | Murugesan M
பூச்சிகளின் ஆச்சரியங்கள்

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பூச்சிகள் அருங்காட்சியகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூச்சிகளையும் அதன் வரலாற்றையும்  3 டி தொழில்நுட்பத்தில் மெய்நிகர் காட்சியாகப் பார்க்கும்  வகையில்  ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பூச்சிகளையும் அதன் ஆச்சரியங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள உதவும் இந்த பூச்சிகளின் அருங்காட்சியகம் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சுற்றுச்சூழல் மேம்பாட்டில் இன்றியமையாத பங்களிப்பை வழங்கி வரும் பூச்சி இனங்கள் ஒவ்வொன்றும் இயற்கையின் சூழலுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. அத்தகைய பூச்சிகள் மற்றும் அவை சார்ந்திருக்கும் இனங்கள் குறித்தும் அறிந்து கொள்ள ஏதுவாக, கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூச்சிகள், 2 ஆயிரத்தி 500க்கும் அதிகமான வண்டு மற்றும் எறும்பு வகைகள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சி இயல் துறையின் மூலம் ஆறாயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் இந்தியா மட்டுமின்றி வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த பூச்சி இனங்களும், ஒட்டுண்ணிகளும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. பூச்சிகளுக்கு அருகிலேயே அவற்றின் வகை, இனம், நன்மை, தீமை உள்ளிட்ட விவரங்களும் எல்.இ.டி திரைகள் மூலமாக விளக்கப்பட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது

பூச்சிகளுக்காக வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், நாணயங்கள், அதனை வெளியிட்ட நாடுகள், பூச்சிகள் குறித்து உலகளவில் வெளிவந்திருக்கும் நூல்கள் ஆகியவையும் இந்த பூச்சிகள் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் அருங்காட்சியகத்தின் வாயிலில் தேனீக்கள் வளர்க்கும் பண்ணையும் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

அருங்காட்சியகத்தின் நுழைவுவாயிலில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் வயலின் மாண்டிஸ் பூச்சியின் வடிவ வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பூச்சிகளை வெறும் பூச்சிகளாக மட்டுமே கடந்து செல்லாமல் அவற்றின் ஆச்சரியங்களையும் 3 டி தொழில்நுட்பத்தில் மெய்நிகர் காட்சிகளின் மூலம் தெரிந்து கொள்ள உதவும் இந்த அருங்காட்சியகம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Tags :
Advertisement