பூந்தமல்லியில் போலீஸார் முன்பே இளைஞருக்கு அரிவாள் வெட்டு!
சென்னை அடுத்த பூந்தமல்லியில் முன் விரோதம் காரணமாக, போலீசார் முன்பே ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குமணன்சாவடியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் ஒருவரை இன்னொரு நபர் கையில் அரிவாளுடன் விரட்டிச் செல்வதாக, போக்குவரத்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசாரிடம், தன்னை ஒருவர் வெட்ட வருவதாக கூறி கையில் வெட்டு காயத்துடன் நபர் ஒருவர் தஞ்சம் அடைந்தார்.
ஆனால் அப்போதும் சற்றும் பயப்படாத மற்றொரு நபர் போலீசார் முன்னிலையிலேயே மீண்டும் அரிவாளால் வெட்டி உள்ளார். இதனை அடுத்து, வெட்டுப்பட்டவர், அந்த நபரை கீழே தள்ளி பிடித்தார். பின்னர் வந்த பூந்தமல்லி போலீசார் வெட்டுப்பட்டவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அரிவாளால் வெட்டிய நபரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வெட்டுப்பட்ட நபர் நூம்பலை சேர்ந்த மோகன்ராஜ் என்பதும், முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் இவரை வெட்டியதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.