பெங்களூருவில் கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரம் - ஆர்சிபி நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!
பெங்களூருவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா மற்றும் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது. கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதான சவுதாவிலும், கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலில் விதானசவுதாவில் நடந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.
பின்னர், சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பெங்களூரு அணிக்கான பாராட்டு விழாவை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், 11 பேர் உயிரிழந்த நிலையில், 55 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், ஆர்பிசி அணியின் மார்க்கெட்டிங் நிர்வாகி, வெற்றி கொண்டாட்டத்திற்கான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.