For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பெரும் பொருளாதார சீரழிவு : பஞ்சத்தை நோக்கி பயணிக்கும் வங்கதேசம்!

07:45 PM May 27, 2025 IST | Murugesan M
பெரும் பொருளாதார சீரழிவு   பஞ்சத்தை நோக்கி பயணிக்கும் வங்கதேசம்

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடும் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு வங்கதேசம் தள்ளப்பட்டிருக்கிறது. அரை நூற்றாண்டுக்கு முந்தைய நிலைக்கு நாடு சென்றுவிட்டதாக தொழில்துறையினர் புலம்புகின்றனர். ஏன் இந்த நிலை? வங்கதேசத்தில் என்ன நடக்கிறது? விரிவாகப் பார்க்கலாம்.

1971-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி இந்தியாவின் உதவியாலும் ஏராளமானோரின் உயிர் தியாகத்தாலும் பாகிஸ்தானின் கிழக்குப் பகுதி வங்கதேசம் என்ற தனிநாடாக மாறியது. தேசத்துக்காகப் போராடியவர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சிறப்புச் சலுகைகளைக் கொடுப்பது இயல்பான ஒன்று. அப்படித்தான் வங்கதேசத்திலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப்பணிகளில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

Advertisement

அதை 5 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் 2018-ஆம் ஆண்டு குறிப்பிட்ட இடஒதுக்கீட்டை வங்கதேச அரசு ரத்து செய்தது. அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த வங்கதேச உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு தொடரும் எனத் தீர்ப்பளித்தது. அதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினர்.

முதலில் மாணவர்கள் மட்டுமே பங்கேற்ற போராட்டங்களில் பின்னர் மக்களும் கலந்துகொண்டனர். வங்கதேச காவல்துறையும், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரும் போராட்டக்காரர்களுக்கு இடையூறை ஏற்படுத்தக் கலவரம் வெடித்தது. துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் சுட்டுக்கொல்லப்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

இத்தகைய சூழலில் இடஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவை விசாரித்த வங்கதேச உச்சநீதிமன்றம், இனி தியாகிகளின் வாரிசுகளுக்கு 5 விழுக்காடு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. அதன் பிறகாவது வன்முறை முடிவுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டமும் கலவரமும் தொடர்ந்தன.

அதனால் வேறுவழியின்றி பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனைத் தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் முகமது யூனுஸ் வங்கதேச இடைக்கால அரசுக்குத் தலைமையேற்றார். அரசியலமைப்பு ரீதியாகத் தேர்தலை நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கொண்டு வருவதே யூனுசுக்கு வழங்கப்பட்ட முக்கியப்பணி.

2026-ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்துள்ளார். ஆனால் அதை ஏற்க ராணுவத் தளபதி WAKER-UZ-ZAMAN மற்றும்  வங்கதேச தேசிய கட்சி ஆகியவை மறுப்பு தெரிவித்துள்ளன. இந்தாண்டு டிசம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என முகமது யூனுசுக்கு ராணுவத் தளபதி அழுத்தம் கொடுத்து வருகிறார். இதன்காரணமாக முகமது யூனுஸ் பதவி விலகப்போவதாகத் தகவல்கள் பரவின. அவரிடமிருந்து ஆட்சியைப் பறிக்க ராணுவத் தளபதி முயல்வதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே வங்கதேசத்தை அமெரிக்காவுக்கு விற்க முயல்வதாக முகமது யூனுஸ் மீது ஷேக் ஹசீனா குற்றம்சாட்டினார். அதேபோல் வங்கதேசத்தில் இடைக்கால அரசே நீடிக்க வேண்டும் எனச் சீனாவும், பாகிஸ்தானும் விரும்புவதாகக் கூறப்படுகிறது. அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் நோக்கத்தில்தான் முகமது யூனுஸ் தேர்தலைத் தள்ளிப்போடுவதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படி அரசியலில் நிலையற்ற தன்மை நிலவுவதால் வங்கதேசப் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் வங்கதேசத்தில் உள்ள பல்வேறு வணிக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அரசியல் ரீதியாக மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் வங்கதேசம் போராட்டத்தைச் சந்தித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். மின்சாரம் மற்றும் எரிவாயு பற்றாக்குறையால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக வணிகர்கள் வேதனையுடன் கூறினர். உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையைப் பற்றி இடைக்கால அரசு கவலைப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

வங்கதேசம் தனிநாடாக உருவாவதற்கு முன்பு கல்வி அறிவு பெற்ற பலர் கொல்லப்பட்டனர். தனி நாடு கேட்டு கிழக்கு பாகிஸ்தானியர்கள் போராட்டம் நடத்துவதற்குப் படித்தவர்களே காரணம் என்று நினைத்து மேற்கு பாகிஸ்தான் நிகழ்த்திய கொடூரம் அது. 1971-ஆம் ஆண்டு கல்வி அறிவு பெற்றவர்கள் தாக்கப்பட்டதைப் போல தற்போது தொழிலதிபர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வணிக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

பணம் செலுத்திய பிறகும் எரிவாயு விநியோகிக்கப்படவில்லை என்று கூறும் வணிகர்கள்,  வங்கிக் கடனை உடனடியாக திருப்பிச் செலுத்தும்படி அரசு அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டினர். கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அது மரண தண்டனைக்கு ஒப்பானது என்றும் தொழில்துறையினர் விமர்சித்தனர்.

இதே நிலை நீடித்தால் அடுத்த 2 மாதங்களுக்குள் நாட்டில் உள்ள பாதி தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிடும் என்றும், அதன்மூலம் ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் இருப்பதாகவும் வணிகர்கள் தெரிவித்தனர். அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாததால் வங்கதேசத்துக்கு வரவேண்டிய முதலீடுகள் வியட்நாமுக்குச் செல்வதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

தொழில்துறையினரின் நிலைமை இவ்வாறிருக்க, சில விதிகளுக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆசிரியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் எனப் பலர் அரசுக்கு எதிராகத் திரும்பியிருப்பதால் வங்கதேசத்தில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இப்படியே போனால் பெரும் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரும் என அனைத்து தரப்பினரும் எழுப்பும் அபாய ஒலி முகமது யூனுஸின் காதுகளில் விழுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement
Tags :
Advertisement