For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

"போராட்டம் வெடிக்கும்" : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

08:15 PM Jun 06, 2025 IST | Murugesan M
 போராட்டம் வெடிக்கும்      புதிய ஹைடெக் பார்  திறக்க எதிர்ப்பு

சேலத்தில் இயங்கி வரும் மதுபானக் கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் புதியதாக ஹைடெக் பாரை திறக்க திட்டமிட்டிருப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவது போல மூடி, மறுபுறம் மனமகிழ் மன்றங்களைத் திறந்து வருவதாகவும் தமிழக அரசு மீது புகார் எழுந்திருக்கிறது.

சேலம் சங்ககிரி பிரதான சாலையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகமும், நெத்திமேடு பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் இயங்கி வருகிறது. இந்த நெத்திமேடு பகுதியிலிருந்து கொண்டாலம்பட்டி ரவுண்டானா பகுதி வரை மட்டும் ஏற்கனவே ஐந்து டாஸ்மாக் பார்கள் இயங்கி வரும் நிலையில் மேலும் ஒரு டாஸ்மாக் கடையைத் திறக்க முடிவு செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

குறிப்பிட்ட பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் மதுபானக்கடைகளால் அருகில் இருக்கும் கோயில்களுக்கு வரும் பக்தர்களும், , மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.  இந்த கடைகளை அகற்ற வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது குமர கவுண்டர் தெருவில் ஹைடெக் டாஸ்மாக் பார் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

ஏற்கனவே இயங்கிவரும் மதுபானக்கடைகளால் மது அருந்திவிட்டு அலப்பறை செய்யும் மதுப்பிரியர்களால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினர் இன்னல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு பார் திறந்தால் போராட்டம் வெடிக்கும் எனவும் அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement

டாஸ்மாக் கடைகளை படிப்படியாகக் குறைத்து மதுவிலக்கை அமல்படுத்துவோம் என வாக்குறுதியளித்த திமுக, ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவது போல மூடி, மறுபுறம் பார் வசதியுள்ள மனமகிழ் மன்றங்களை அதிகளவில் திறந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இருக்கும் மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை மறுக்கப்படும் போதெல்லாம் மக்கள் போராட்டத்தின் மூலம் அவைகள் மூடப்பட்ட வரலாறு உண்டு.   எதிர்ப்பை மீறி ஹைடெக் பார் திறக்கப்பட்டால் அதற்கான எதிர்வினையை மாவட்ட நிர்வாகமும், மதுவிலக்குத்துறையும் சந்திக்க நேரிடும் எனவும் அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement