For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

போர்நிறுத்த பேச்சுவார்த்தை : ட்ரம்ப்பை 1 மணி நேரம் காத்திருக்க வைத்த புதின்!

02:15 PM Mar 21, 2025 IST | Murugesan M
போர்நிறுத்த பேச்சுவார்த்தை   ட்ரம்ப்பை 1 மணி நேரம் காத்திருக்க வைத்த புதின்

ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக,  ரஷ்ய அதிபர் புதினும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைப்பேசியில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.  90 நிமிடங்கள் நடந்த இந்த தொலைப்பேசி உரையாடலில், என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப் பட்டன ? என்பதைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ட்ரம்ப் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். 30 நாட்கள் போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புக் கொண்டார். ரஷ்யாவையும் போர் நிறுத்தத்துக்குச் சம்மதிக்க வைக்க, உயர்நிலைக்குழு ஒன்றை ரஷ்யாவுக்கு ட்ரம்ப் அனுப்பிவைத்தார்.

Advertisement

அடுத்த கட்ட நடவடிக்கையாக, ரஷ்யா அதிபர் புதினுடன்,அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைப்பேசியில், பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உக்ரைன் போர் குறித்து இரு தலைவர்களும் வெளிப்படையாகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக கிரெம்ளின்  மாளிகை தெரிவித்துள்ளது.  இருதரப்பு உறவுகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய இரு நாட்டுத் தலைவர்களும் போர் முடிந்து நீடித்த அமைதி திரும்பவேண்டும் என்றும் உறுதி கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது.

உக்ரைனில் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை மட்டும் 30 நாட்களுக்கு நிறுத்தவைக்க ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக் கொண்டுள்ளார். ஏற்கெனவே, உக்ரைனின் 80 சதவீதம் எரிசக்தி உள்கட்டமைப்புக்களை ரஷ்யா அழித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது, உக்ரைனால் ரஷ்யாவின் எரிசக்தி அமைப்புகள் தாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றவே ரஷ்யா இப்படிப் பாதிப் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நேட்டோ நாடுகள் உக்ரைனுக்குச் செய்துவரும் அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்த வேண்டும் என்றும்,  உக்ரைனுக்கு உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்வதையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் ரஷ்யா நிபந்தனை விதித்துள்ளது.

அதாவது போர் நிறுத்தத்தின் போது, உக்ரைனுக்கு வெளிநாட்டு இராணுவ உதவியை நிறுத்தும்போது, உக்ரைனுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. ட்ரம்புடனான தொலைப்பேசி உரையாடல் முடிந்த சில நேரங்களிலேயே உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா  ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா- உக்ரைன் இரு நாடுகளுக்கு இடையே 175 பேருக்கு 175 பேர் என்ற கணக்கில் கைதிகள் பரிமாற்றத்துக்கும் இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், ரஷ்ய மருத்துவ மனைகளில்  சிகிச்சை பெற்று வரும் 23 உக்ரைன் இராணுவ வீரர்களை விடுவிக்கவும் ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது.

இதற்கிடையே, பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் துறையில் அமெரிக்கா ரஷ்யா இருநாடுகளுக்கும் இடையே   ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாகக் கூறப்பட்டுள்ளது. எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு மீதான 30 நாட்கள் போர் நிறுத்தம், கருங்கடலில் கடல்சார் போர் நிறுத்தம்,   முழு போர் நிறுத்தம் மற்றும் நிரந்தர அமைதி குறித்த அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடத்தவும் ட்ரம்பும் புதினும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ட்ரம்புடன் தொலைப்பேசி உரையாடலுக்கு முன்னதாக, தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களிடம் நேரிடையாக பேசும் நிகழ்ச்சிக்கும் புடின் ஒப்புக்கொண்டிருந்தார். ட்ரம்புடன் தொலைப்பேசி உரையாடலுக்குச்  செல்லவேண்டும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டும் புதின் அவசரப்படவில்லை எனக் கூறி புறக்கணித்ததாகச் செய்திகள் வந்துள்ளன.

ஒதுக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக கிரெம்ளின் மாளிகைக்கு வந்த புதின் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.இதனால், அமெரிக்க அதிபரை ஒரு மணி நேரம் புதின் காத்திருக்க வைத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ட்ரம்பை புதின் அவமானப்படுத்தியுள்ளார் என்று சமூக ஊடகங்களிலும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement