For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

போர் விமானங்களின் ராட்சசன் : ஈரானின் அணுசக்தி ஆசையை அழித்த அசுரன்!

08:35 PM Jun 24, 2025 IST | Murugesan M
போர் விமானங்களின் ராட்சசன்   ஈரானின் அணுசக்தி ஆசையை அழித்த அசுரன்

ஈரானில் உள்ள  ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய முக்கிய அணுசக்தி தளங்கள் மீது  அமெரிக்கா பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. அதென்ன பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகள் ? அவற்றைப் பற்றியும்  சுமந்து சென்ற  B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானம் பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம் .

ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 96 கிலோமீட்டர் தொலைவில் மலைகள் சூழ்ந்த பகுதியில்,  ஃபோர்டோ அணுசக்தி தளம் அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட நிலத்தடி வசதிகள், யூரேனியத்தைச் செறிவூட்ட பயன்படுத்தப்படும் அதிநவீன இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருந்த இந்த தளத்தில் இரண்டு முக்கிய சுரங்கப் பாதைகள் உள்ளன. அந்நாட்டின் மிக முக்கியமான  யூரேனியம் செறிவூட்டல் தளமான இது, பூமிக்கு அடியில் மிக ஆழத்தில் அமைந்துள்ளது.

Advertisement

ஈரானின் அணுசக்தி கோட்டை என்று அழைக்கப்படும்  ஃபோர்டோ அணுசக்தி தளத்தின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.ஆனாலும் மலைக்கு அடியில்,இந்த அணுசக்தி தளம் இருந்த காரணத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நிலத்துக்கடியில், பல கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும் இந்த ஃபோர்டோ அணுசக்தி தளத்தைத் தாக்கும் திறன் கொண்ட பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகள் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளன.  எனவே, இந்த அணுசக்தி தளத்தைத் தாக்குமாறு அமெரிக்காவிடம் இஸ்ரேல் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது.

இந்நிலையில், B-2 ரக அதிநவீன ஸ்டெல்த் ரக குண்டு வீச்சு விமானம் மூலம், அமெரிக்கா தனது ஜிபியு-57 பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி ஃபோர்டோ அணுசக்தி தளத்தை அழித்துள்ளது.

Advertisement

MOTHER OF ALL BOMBS என்று செல்லமாக அழைக்கப்படும் பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகள் GBU-57 ஆகும்.   GBU என்பது Guided Bomb Unit என்பதைக் குறிக்கிறது. 57 என்பது வெடிகுண்டு வடிவமைப்பின் வகையைக் குறிக்கிறது.

சுமார் 50,000 அடி உயரத்தில் இருந்து GBU  வெடிகுண்டுகள் வீசப்படுவதால், திட்டமிடப்பட்ட இலக்குகள் முற்றிலுமாக அழிக்கப்படும். இந்த பங்கர் பஸ்டர் மூலம் 300 அடிக்குக் கீழ் உள்ள இலக்குகளைக் கூட வெற்றிகரமாகத் தாக்கப்படும். அமெரிக்காவின் ஆப்ரேஷன் மிட் நைட் ஹேமர் நடவடிக்கையில் அமெரிக்கா, 7 பி 2 போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

B-2  என்பது அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லக் கூடிய பல்துறை குண்டுவீச்சு விமானமாகும். அமெரிக்க இராணுவத் தொழில்நுட்பத்தில் B-2 போர் விமானம்  ஒரு வியத்தகு முன்னேற்றமாகும்.

ஒரே ஒரு பணியில் சுமார் 44 மணிநேரம் வரை காற்றில் பறக்கக் கூடிய திறன் பெற்ற இந்த விமானம், எரிபொருள் நிரப்பப்படாத நிலையில் சுமார் 11,112  கிலோமீட்டர் பறக்கக் கூடியதாகும்.  172 அடி இறக்கைகள் கொண்ட இந்த விமானம் 18,144 கிலோ எடையுடைய வெடி மருந்துகளைச் சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டதாகும். இரண்டு விமானிகள் மட்டுமே செல்லக்கூடிய அளவில் B-2 போர் விமானம் வடிவமைக்கப் பட்டுள்ளது. கண்டங்களுக்கு இடையேயான தூரங்களை   எளிதில் பறந்து சென்று இலக்குகளைத் தாக்கக் கூடியதாகும்.

B-2 நான்கு ஜெனரல் எலக்ட்ரிக் F118-GE-100 டர்போஃபேன் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது. இந்த இயந்திரங்கள் எரியும் ஜெட் இயந்திரங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த வெப்பநிலையில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நடுவானில் எரிபொருள் நிரப்பும் திறனுடன் B-2 விளங்குகிறது. குறிப்பாக,பறக்கும் நிலையிலேயே  வான்வழி டேங்கர்களுடன் இணைக்கப்பட்டு, தரையிறங்காமல் எரிபொருளை நிரப்ப முடிகிறது. விமானத்தின் பறக்கும் இறக்கை வடிவமைப்பு  எரிபொருள் சிக்கனத்தை பராமரிக்க உதவுகிறது.

B-2 விமானம் ஒவ்வொன்றும் சுமார்  2.1 பில்லியன் டாலராகும். உலகின் மிகவும் விலையுயர்ந்த இராணுவ விமானம் இதுவாகும். நார்த்ரோப் க்ரம்மனால் தயாரிக்கப்பட்ட இந்த குண்டுவீச்சு விமானம், அதன் அதிநவீன ஸ்டெல்த் தொழில்நுட்பத்துடன் 1988 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. அன்றைய சோவியத் நாடு மீது அணுக் குண்டுகளை வீசுவதற்காக இந்த விமானம் உருவாக்கப் பட்டது.

மிசோரியிலிருந்து ஆப்கானிஸ்தான்,லிபியா மற்றும் இப்போது ஈரான் வரையிலான பயணங்களில் இந்த  போர் விமானத்தின் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் B-2 விமானங்கள்   மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்திலிருந்து இயங்குகின்றன.

ஆப்ரேஷன் மிட் நைட் ஹேமரில்,ஏழு B-2 போர் விமானங்கள் ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகளை வீசின.ஒவ்வொரு விமானமும் 2 குண்டுகள் என மொத்தம் 14 வெடி குண்டுகள் வீசப்பட்டுள்ளன. B-2 போர் விமானங்கள்  தங்கள் இலக்கை அடைய 18 மணிநேரம் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த்  போர் விமானத்தின் மூலம் GBU-57  பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகளை வீசுவது இதுவே முதல்முறையாகும்.

நீண்ட போர் பயணங்களை வசதியாக மாற்ற, B-2 விமானத்தில் மினி FRIDGE மற்றும் MICRO WAVE  OVEN  பொருத்தப்பட்டுள்ளன. B-2   நீண்ட தூர விமானங்களுக்குப் பொருத்தப்பட்ட விமானங்களைப் போன்று இதில்  ஒரு கழிப்பறையும் அமைக்கப் பட்டுள்ளது.

ஒரு விமானி விமானத்தை  இயக்கும் போது, இன்னொரு விமானி படுத்து ஓய்வெடுக்க போதுமான இடமும் இந்த விமானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. B-2 போர் விமானங்கள் ஈரான் வான்வெளியை நெருங்கும்போது அவற்றை வரவேற்க, 125க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் பாதுகாப்புக்காக அணிவகுத்துச் சென்றன.

ஈரானுக்குள் 25 நிமிட இராணுவ நடவடிக்கையில் , ஈரானின் அணுசக்தி கோட்டையான ஃபோர்டோ முற்றிலுமாக அழிக்கப் பட்டுள்ளது. அமெரிக்கா ஒரு இராணுவத் தாக்குதலில் 15 டன் எடையுள்ள மிகப்பெரிய GBU-57 பங்கர் பஸ்டர்  வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியது இதுவே முதல் முறையாகும்.

Advertisement
Tags :
Advertisement