போலீசார் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறி இளைஞர் தற்கொலை : உறவினர்கள் திடீர் சாலை மறியல்!
தருமபுரி மாவட்டத்தில் இளைஞரின் தற்கொலைக்கு காரணமாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பென்னாகரம் அருகேயுள்ள ராமனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் புகழேந்தி கடந்த சில மாதங்களுக்கு முன், இளம் பெண் ஒருவருடன் தருமபுரியில் உள்ள லாட்ஜில் அறையெடுத்து தங்கியுள்ளார்.
அப்போது இருவரும் நெருக்கமாக இருந்ததை லாட்ஜ் உரிமையாளர் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவருக்கு புகழேந்தி 3 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து புகழேந்தியை தருமபுரி நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த சில போலீசாரும், இதே காரணத்தை வைத்து பணம் கேட்டு மிரட்டியதாகவும், விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அடித்து டார்ச்சர் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கு 6 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இருந்தும் போலீசார் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததால் மனமுடைந்த புகழேந்தி, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், புகழேந்தியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தருமபுரி - ஒகேனக்கல் சாலையில் அமர்ந்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.