மக்களுக்காக உழைத்ததால் இன்னொரு வாய்ப்பை வழங்க வேண்டும் - நிதிஷ் குமார்
பிறரை போலக் குடும்பத்திற்காக இல்லாமல் மக்கள் அனைவருக்காகவும் உழைத்ததால், தனக்கு இன்னும் ஒரு வாய்ப்பை மக்கள் தர வேண்டும் எனப் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. 243 தொகுதிகள் கொண்ட இம்மாநில சட்டசபைக்கு இரு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 6-ம் தேதி, 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் நிதிஷ் குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் 15 ஆண்டுகால ஆட்சியில், காட்டாட்சி ராஜ்ஜியம் நடந்தது எனவும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுச் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தி, பெண்கள் இரவில் தனியாகப் பாதுகாப்பாகப் பயணிக்க முடியும் என்பதை உறுதி செய்யப் பாடுபட்டது என்றும் கூறியுள்ளார்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால் பீகார் மேலும் வளர்ச்சியடையும் எனவும், அதனால் தங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் என்றும் நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.