மக்கள் கொண்டாடும் ரியல் ஹீரோ ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி!
ஆப்ரேஷன் சிந்தூரில் விமானப் படையை வழிநடத்திய ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தியை, ரியல் ஹீரோவாக பலரும் கொண்டாடி வருகின்றனர். இதுபற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பை இனி பார்க்கலாம்.
இலக்குகளைத் தாக்குவது மட்டுமே எங்க வேல... சடலங்களை எண்ணுவதல்ல. அது அவர்களின் வேலை” என்கிற வார்த்தைகள் நாடுமுழுவதும் வைரலாகியுள்ளது. இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் இந்திய ராணுவத்தின் விமானப்படை நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர், ஏர் மார்ஷல் அபேஷ்குமார் பார்தி.... சுருக்கமாக ஏ.கே.பார்தி, இன்றைக்குக் கொண்டாடப்படும் ரியல் ஹீரோ.
ஆம். பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது நமது விமானப்படை. எதிரிகளின் இலக்குகளை மட்டும் குறித்து வெற்றிகரமான தாக்குதலை நடத்தினர். இந்தியாவின் இந்த துல்லிய தாக்குதலை வியந்து பார்த்தது உலகம்.
இதைத் திட்டமிட்டு, செயல்படுத்திக் காட்டியவர் ஏ.கே.பார்தி. அந்த வெற்றிச் செய்தியைப் பகிர்ந்து கொண்ட ஊடக சந்திப்பில், ஒரு செய்தியாளரின் கேள்விக்கு, பாகிஸ்தானின் கிராணா மலையில் அணு ஆயுதங்கள் இருப்பது நீங்க சொல்லித்தான் தெரியும். நன்றி என்று அவர் கூறிய பதிலும், அதற்கு பிறகான அவரது புன்னகையும் பல அர்த்தங்களை சொல்லியது.
பார்தி தனது தொடக்கப் பள்ளிப் படிப்பை அரசுப் பள்ளியிலும், பின்னர் ஜார்க்கண்டில் உள்ள திலையா சைனிக் பள்ளியிலும் பயின்றார். பின்னர், அவர் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்றார், 1987 இல் இந்திய விமானப்படையின் (IAF) போர் சேர்ந்தார். அர்ப்பணிப்பான பணிக்காக, கடந்த 2008-ம் ஆண்டு குடியரசுத் தலைவரின் விமானப்படை பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 2023 இல் ஏர் மார்ஷலாக பதவி உயர்வு பெற்றார்.
2024ம் ஆண்டு அக்டோபரில் விமான நடவடிக்கைகளின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார். விமானப்படையின் தலைமையகத்தில் டி.ஜி.எம்..ஓ-வாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் பிரயாக்ராஜில் உள்ள மத்திய விமானப் படைத் தளத்தில் மூத்த அதிகாரியாக பணியில் இருந்தார்.
இத்தகைய சிறப்புப் பெற்ற ஏ.கே.பார்தி, எளிய கிராமப்புற பின்னணியைக் கொண்டவர். பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டம் ஜுன்னி கலன் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஜீவச்லால் யாதவ், மாநில நீர்ப்பாசனத் துறையில் கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் ஊர்மிளா தேவி. இவர்களின் மூத்த மகன் ஏ.கே.பார்தி.
தந்தையைப் பொருத்தவரை ஏதாவது ஒரு அரசு வேலைக்குச் சென்றால் போதும் என்று விரும்பிய நிலையில், தாயார் கொடுத்த உற்சாகத்தில் விமானப்படையில் சேர்ந்தார். சிறுவயதில் தலைக்கும் மேல் பறந்த விமானத்தைப் பார்த்த ஏ.கே.பார்தியின் தாத்தா, நம்ம குடும்பத்தில் இருந்து ஒருத்தர் விமானத்தில் பறக்க வேண்டும் என்று கூறிய வார்த்தைகள் பார்தி மனதில் ஆழமாகப் பதிந்தன.
எப்போதும் எளிமையாக இருக்கும் பார்தி, எத்தகைய கடின சூழலையும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக சமாளிப்பது அவரது தனித்துவம். இதற்கு சமீபத்திய உதாரணம்தான் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்த செய்தியாளர் சந்திப்பு என்கிறார்கள் அவரது நண்பர்கள். "பயங்கரவாதிகளுக்கு நமது ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது எங்க கிராமத்திற்கு மட்டுமல்ல தேசத்திற்கே பெருமை” என்று நெகிழ்கிறார் ஏ.கே.பார்தியின் தந்தை ஜீவச்லால் யாதவ்.
ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, தன்னுடைய கிராமம், சுற்றியுள்ள கிராமங்களின் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி, வழிகாட்டி, ஊக்கப்படுத்தும் பணிகளையும் சத்தமில்லாமல் செய்து வருகிறார். இதனால் அடுத்த தலைமுறை சாதனையாளர்கள் நிறைய வருவார்கள் என்கிறார்கள் அப்பகுதியினர். ஏனென்றால் ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி. சராசரி குடும்பத்தில் பிறந்த ரியல் ஹீரோ.