மக்கள் தொடர்பு துறை அலுவலக முத்திரையை போலியாக பயன்படுத்தி மோசடி - மாற்றுத்திறனாளி கைது!
கன்னியாகுமரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாவட்ட ஆட்சியரின் கையெழுத்து மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் அலுவலக முத்திரையை போலியாக பயன்படுத்தி, பண வசூலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், மாணவர்களுக்கு குறும்படம் ஒன்றை வெளியிட மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளதாக, மாவட்ட மக்கள் தொடர்புத்துறையில் இருந்து பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கு சுற்றறிக்கை சென்றுள்ளது. பின்னர் ஒவ்வொரு பள்ளிக்கும் நேரடியாக சென்ற மாற்றுத்திறனாளி ஒருவர் மாணவர்களுக்கு 10 ரூபாய் வீதம் வசூல் செய்து குறும்படத்தை ஒளிபரப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஒரு தனியார் பள்ளி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்தபோது, மாற்றுத்திறனாளி நபர் மாவட்ட ஆட்சியரின் கையொப்பம் மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் அலுவலக முத்திரையை போலியாக பயன்படுத்தி மோசடி செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நேசமணி நகர் போலீசார், பண மோசடியில் ஈடுபட்ட என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சரவண குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.