For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மதுரை வரும் அமித்ஷா - பதற்றத்தில் திமுக!

09:05 AM Jun 08, 2025 IST | Murugesan M
மதுரை வரும் அமித்ஷா   பதற்றத்தில் திமுக

எந்த ஷா வந்தாலும் தமிழகத்தை ஆள முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த ஒரே வாரத்தில் அமித்ஷா தமிழகம் வருவது திமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் மாவட்டங்களின் மையமாகத் திகழும் மதுரையில் அமித்ஷா தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் எனப் பேசப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள மாநிலக் கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை 2026ம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை முடுக்கி விடத் தொடங்கியுள்ளன. கடந்த முறையைப் போலவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இதர கட்சிகளுடன் இணைந்து திமுக தேர்தலை எதிர்கொள்கிறது.

Advertisement

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பாஜகவும், தேமுதிகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் கைகோர்த்திருக்கிறது. மேலும் பல கட்சிகளைக் கூட்டணியில் இணைக்கப் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றன.

மீண்டும் ஆட்சியமைக்கவும், ஆட்சி மாற்றத்திற்கும் வழிவகுக்கும் சக்தி படைத்த தென் மாவட்டங்களைக் குறிவைத்தே அனைத்து கட்சிகளின் செயல்பாடுகளும் அண்மைக்காலமாக அமைந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டம் அரசியல் கட்சித் தலைவர்கள் விரும்பும் மையமாகத் திகழ்ந்து வருகிறது.

Advertisement

வழக்கமாகச் சென்னையில் பொதுக்குழுவை நடத்தும் திமுக இம்முறை மதுரையில் நடத்தியதற்கும் வாக்கு வங்கிகளே காரணமாக அமைந்தது. பொதுக்குழுவில் பேசிய முதலமைச்சர், எந்த ஷா வந்தாலும் தமிழகத்தை ஆள முடியாது எனவும், தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என வீரவசனம் பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

எந்த ஷா வந்தாலும் தமிழகத்தை ஆள முடியாது என எந்த மதுரையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழங்கினாரோ, அதே மதுரையில் அடுத்த ஒரே வாரத்தில் அமித்ஷா தலைமையிலான மாபெரும் பொதுக்கூட்டத்திற்குத் தமிழக பாஜக ஏற்பாடு செய்திருக்கிறது. முன்னதாக கோவையில் அமித்ஷா தலைமையிலான பொதுக்கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் முதலமைச்சரின் சர்வாதிகாரப் பேச்சே அந்த கூட்டத்தை மதுரையில் நடத்துவதற்கு முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது.

அமித்ஷா ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போது கலக்கமடையும் திமுகவிற்கு இந்த முறை கூடுதல் பதட்டத்தையும் வரவழைத்துள்ளது. மதுரையில் பொதுக்குழுவைக் கூட்டி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதோடு, உணர்வுப்பூர்வமாகப் பேசி வாக்குகளைப் பெற்றுவிடலாம் என எண்ணிய திமுகவின் எண்ணத்தை சுக்குநூறாக உடைக்கும் வகையில் அமித்ஷாவின் வருகை அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

வரும் 8ம் தேதி மதுரைக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்து கட்சியின் உயர்மட்ட தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் வேலம்மாள் மைதானத்தில்   மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த கிளை அமைப்புகளில் தொடங்கி மாநில அளவிலான அனைத்து உயர் பொறுப்பு வகிக்கும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். சுமார் 12 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அதிருப்தி, திமுக தலைமைக்கு மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்து வருகிறது. அதுவே உதயநிதியைத் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வரலாம் என்ற திமுக தலைமையின் முடிவையும் திரும்பப் பெறக் காரணமாகவும் அமைந்திருக்கிறது.

திமுகவுக்கு எதிராக அணி வகுத்திருக்கும் பாஜக – அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்ற தகவல் திமுகவை மென்மேலும் பதற்றமடையச் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைத்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும்  அமித்ஷாவின் இந்த மதுரை வருகை, அதற்கு அடித்தளமாக அமையும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Advertisement
Tags :
Advertisement