மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 10,000 இடங்கள் : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த ஆண்டு கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அவர், மருத்துவத்துறை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் ஏஐ தொழில்நுட்பம் புகுத்தப்படும் என்றும், மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த ஆண்டு கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் மூலம் நகரங்களை மேம்படுத்த 1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், அணு மின்சார உற்பத்தியை 100 ஜிகாவாட் அளவிற்கு உயர்த்துவதே அரசின் இலக்கு என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். மேலும் நாடு முழுவதும் சிறு அணு உலைகள் அமைக்க 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்றும், உதான் திட்டம் மூலம் புதிதாக 120 நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.
இதன் மூலம் 4 கோடி விமான பயணிகள் பயனடைய உள்ளதாக கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறினார்.
அத்துடன் பீகாரில் 4 புதிய பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அவர் அறிவித்தார்.