For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மிகப்பெரிய ஹைட்ரஜன் ரயில் - இந்தியாவில் மார்ச் 31க்குள் பயன்பாட்டிற்கு வருகிறது!

12:45 PM Mar 13, 2025 IST | Murugesan M
மிகப்பெரிய ஹைட்ரஜன்  ரயில்   இந்தியாவில் மார்ச் 31க்குள் பயன்பாட்டிற்கு  வருகிறது

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பசுமை எரிசக்தி துறையில் இந்திய ரயில்வே துறையின் முக்கிய மைல்கல்லாகும். இந்தியாவின் மிகவும் அதிநவீன ரயில்களில் ஒன்றான ஹைட்ரஜன் ரயில் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துதல் ஆகிய நோக்கத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு,பல்வேறு துறைகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Advertisement

கடந்த பத்தாண்டுகளில், இந்திய இரயில்வே துறையிலும் , பாதுகாப்பான மற்றும் அமைதியான நவீன பயண அனுபவத்தை மக்களுக்கு வழங்கும் முயற்சிகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன.

2030ம் ஆண்டுக்குள் நிகர Zero கார்பன் வெளியீடு (Net Zero Carbon Emission) என்ற நோக்கத்துடன் இந்திய ரயில்வே துறை செயல்படுகிறது. உலகின் முதல் 100% பசுமை ரயில்வே ஆக மாறுவதே இந்திய ரயில்வே துறையின் இலக்காக உள்ளது.

Advertisement

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை இந்திய ரயில்வே துறை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த முயற்சி, இந்தியாவின் பசுமை எரிசக்தி துறையில் முக்கிய அங்கமாக பார்க்கப் படுகிறது.

இந்த ஹைட்ரஜன் ரயிலில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கக் கூடிய புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை (Fuel Cells) பயன்படுத்தி இந்த ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயிலில் 1,200 குதிரைத்திறன் கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலே, உலகின் மிகப்பெரிய ஹைட்ரஜன் ரயிலாகும். இந்த ஹைட்ரஜன் ரயில் கார்பனை வெளியேற்றாமல், வெறும் நீரையும் வெப்பத்தையும் மட்டுமே வெளியிடுகிறது.

ஹைட்ரஜன் ரயில், கார்பன் வெளியேற்றமில்லாத தூய்மையான எரிசக்தியை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் மாசுபாடு குறைகிறது. மேலும், எரிசக்தி திறன் அதிகம் என்பதால், வழக்கமான எரிபொருட்களை விட சிறப்பான செயல்திறனை கொண்டுள்ளது. சத்தம் குறைவாக இயக்கப்படும் இந்த ஹைட்ரஜன் ரயில், பயணிகளுக்கு அமைதியான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குகிறது.

ஹைட்ரஜன் ரயில், மணிக்கு அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹைட்ரஜன் ரயில், ஒரே நேரத்தில், 2,638 பயணிகளை ஏற்றிச் செல்லும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹைட்ரஜன் ரயிலில், பாதுகாப்பு மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு, மேம்பட்ட தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் மிகவும் வசதியாகவும், பாதுகாப்பாகவும் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்த தயாராகி வரும் இந்திய ரயில்வே துறை, வரும் மார்ச் 31ம் தேதிக்குள் ஹரியானாவில் உள்ள ஜிந்த்-சோனிபத் இடையே ஹைட்ரஜன் ரயிலின் இயக்கத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்ட பிறகு மற்ற மாநிலங்களிலும் ஹைட்ரஜன் ரயில்கள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலி மாசுபாட்டையும் இயக்க செலவுகளையும் குறைப்பதன் மூலம், ஹைட்ரஜன் ரயில்கள் பாரம்பரிய ரயில் சேவைகளுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய மாற்றாக அமைகிறது.

சீனா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஹைட்ரஜன் ரயில்கள் பயன்பாட்டில் உள்ளன. ஜெர்மனியில் ஹைட்ரஜன் ரயில் 2018ம் ஆண்டு தான் பயன்பாட்டுக்கு வந்தது. முதல் ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளதால், உலக அளவில் பசுமை எரிசக்தியில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருகிறது.

Advertisement
Tags :
Advertisement