For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மினி பேருந்து தீ விபத்தில் திருப்பம் : ஊதியக் குறைப்பால் பழிவாங்கிய ஓட்டுநர்!

08:45 PM Mar 21, 2025 IST | Murugesan M
மினி பேருந்து தீ விபத்தில் திருப்பம்    ஊதியக் குறைப்பால்  பழிவாங்கிய ஓட்டுநர்

புனே அருகே நான்கு பேரின் உயிரைப் பறித்த மினி பேருந்து தீ விபத்திற்கு சதிச்செயலே காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த புதன்கிழமை, புனேவின் ஐடி மையமான ஹின்ஜேவாடியில் அருகே ஒரு மினிபஸ்  தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த மினிபஸ் ஒரு கிராபிக்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். 14 ஊழியர்களுடன் வார்ஜேயிலிருந்து ஹின்ஜேவாடிக்கு சென்று கொண்டிருந்த மினிபஸ் திடீரென தீப்பிடித்தது.

Advertisement

பேருந்தின் பின்புறத்தில் உள்ள அவசர வெளியேறும் கதவைத் திறக்க முடியாததால் நான்கு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர்.  வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள் என்றும், அவசரக்கால வெளியேறும் கதவு ஏன் பழுதடைந்தது என்பது குறித்தும் விசாரித்து வருவதாகவும் காவல் துறை ஆணையர் விஷால் கெய்க்வாட் கூறியிருந்தார்.

வட்டார போக்குவரத்து அலுவலகம்  நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் இருக்கைக்கு அடியில் உள்ள வயரிங்கில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட்  தீ விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என அடையாளம் காணப் பட்டது. பல்வேறு தடயங்களையும் தீ பரவிய விதத்தையும் ஆராய்ந்த பிறகு, ஷார்ட் சர்க்யூட் மூலம் ஏற்பட்ட தீ எப்படி இவ்வளவு வேகமாகப் பரவுமா?  என்ற சந்தேகம் எழுந்தது. அதனால் வாகனத்தை ஆய்வு செய்தனர். பிறகு  தடயவியல் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

இந்நிலையில், மினிபஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  56 வயது ஓட்டுநரின் திட்டமிட்ட சதியே மினி பஸ்ஸின் தீவிபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்தது.  தீவிர விசாரணையில் மினிபஸ்ஸுக்கு  தீ வைத்ததாக ஓட்டுநர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அலுவலகத்தில் தனது சம்பளக் குறைப்பு வேதனையளித்ததாகவும், மினி பேருந்தில் பயணிக்கும் சில ஊழியர்கள் தம்மை தொடர்ந்து கேலி செய்து வந்ததாகவும் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். அதனால், பழிவாங்கும் எண்ணத்துடன் ஓட்டுநர் மினி பேருந்துக்குள் தீ வைத்துள்ளார் என்றும்  காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மினி பேருந்துக்குள் தீ வைக்க benzene solution  மற்றும் தீப்பெட்டியைப் பயன்படுத்தியதாக கூறியுள்ள ஓட்டுநர், தீ வைத்ததும், விரைவாக வெளியே குதித்து தப்பியதாகவும் ஓட்டுநர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  தீ வைப்பதற்கு முன்னதாக, யாரும் தப்பிக்க முடியாதபடி, வேண்டுமென்றே பின் கதவைப் பூட்டிவிட்டுச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

அதிருப்தியடைந்த ஓட்டுநரின் சதியே  விபத்துக்குக் காரணம் என்பது பலரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி உள்ளது. இதற்கிடையே, மாநில சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஹேமந்த் ரசானே,  அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Tags :
Advertisement