முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!
சென்னை கொளத்தூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிப்பதாக புகார் எழுந்திருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியில் வசிக்கும் மக்கள் படும் இன்னல்களை இந்த செய்தி தொகுப்பின் மூலம் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சென்னை கொளத்தூர் பாரத் ராஜிவ்காந்தி நகரில் சுமார் 500க்கும் அதிகமான குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அரசால் புறம்போக்கு நிலம் என அறிவிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் பல ஆண்டுகளாகக் குடியிருக்கும் பொதுமக்கள் குடிநீர் வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம் என அனைத்துவிதமான வரிகளையும் கட்டணங்களையும் முறையாகச் செலுத்தி வருகின்றனர்.
பட்டாவும் விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் திடீரென தனிநபர் ஒருவரின் நிலம் எனக்கூறி, ஆண்டாண்டு காலமாக அங்குக் குடியிருக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி நடப்பதாகப் புகார் எழுந்துள்ளது. மேடும், பள்ளமுமாக காட்சியளித்த பொறம்போக்கு நிலத்தைச் சமன்படுத்தி, தாங்கள் சேர்த்த சொத்துக்கள் முழுவதையும் விற்று வீடுகளை கட்டி குடியிருந்து வரும் நிலையில் திடீரெனெ தங்களை வெளியேறச் செல்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நிலம் தனியாருக்குச் சொந்தமானது என்றால் மாநகராட்சி சார்பில் வடிகால் பணிகள் எதன் அடிப்படையில் நடைபெற்றது எனவும் ? 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொறம்போக்கு நிலமாக இருந்த இடம் தற்போது தனிநபருக்குச் சொந்தமாக மாறியது என அப்பகுதி மக்கள் அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்புகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிப்பது தமிழக அரசின் மற்றொரு மோசமான முகத்தை வெளிப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆண்டாண்டு காலமாக வசித்து வந்த இடத்தை விட்டு வெளியேற வற்புறுத்தினால் போராட்டத்தில் ஈடுபடவும் தயங்க மாட்டோம் என பாரத் ராஜிவ் காந்தி நகர் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.