யூனுஸிடம் பிரதமர் மோடி கண்டிப்பு : இந்துக்களின் பாதுகாப்பு அநீதி குறித்து விசாரணை!
தாய்லாந்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடியை வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ் சந்தித்துப் பேசியுள்ளார். வங்கதேசத்தில், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஜனநாயக விரோத செயல்கள் குறித்து விசாரிக்கவும் யூனுஸை, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
BIMSTEC - வங்காள விரிகுடா பகுதியை ஒட்டி அமைந்துள்ள அனைத்து நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இது ஏழு தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட ஒரு சர்வதேச கூட்டமைப்பாகும்.
பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்த அமைப்பில், இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர், மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகள் உள்ளன. பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 6 ஆவது உச்சி மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது.
முன்னதாக இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரலில், வங்கதேச இடைக்கால தலைவரான யூனுஸை சந்திக்கும் விவரம் இல்லை.
ஆனாலும், பிரதமர் மோடியை யூனுஸ் சந்தித்துப் பேசியுள்ளார். முன்னாள் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டு, முகமது யூனுஸ் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு இருவருக்கும் இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.
சிலநாட்களுக்கு முன்னதாக, சீனா சென்றிருந்த யூனுஸ், இந்தியாவின் வட கிழக்கில் உள்ள 7 மாநிலங்கள் நிலத்தால் சூழப் பட்டுள்ளன. அதன் கடல் பகுதியின் ஒரே பாதுகாவலன் வங்கதேசம் என்று கூறினார். மேலும், சீனா தனது பொருளாதார நடவடிக்கைகளை வங்காள விரி குடாவில் அதிகரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார். யூனுஸின் பொறுப்பற்ற இந்தப் பேச்சுக்கு, இந்தியத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்
இந்தச் சூழலில், பிரதமர் மோடி- முகமது யூனுஸ் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. பிரதமர் மோடியைச் சந்திக்க வேண்டும் என்று வங்க தேச அரசு தரப்பு கேட்டுக் கொண்டதன் பேரிலேயே இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கமளித்துள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் இந்த சந்திப்பு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு முதல், வங்க தேசத்தில், இந்துக்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் பற்றி கேள்வி எழுப்பியதோடு, சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்யப் படவேண்டும் என்றும், அட்டூழியங்கள் குறித்து விசாரிக்கவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வங்கதேசத்துடன் நேர்மையான ஆக்கப் பூர்வமான உறவை உருவாக்குவதற்கான இந்தியாவின் விருப்பத்தையும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ள நிலையில், அவரை ஊழல் குற்றச்சாட்டில் விசாரிப்பதற்காக நாடு கடத்த வேண்டும் என்று யூனுஸ் கோரிக்கை வைத்தாக யூனுஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
யூனுஸ் பொறுப்பேற்றதிலிருந்தே ,இரு நாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. மாறாக, பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் யூனுஸ் நெருக்கம் காட்டி வருகிறார். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் Teesta நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் முதலாக இந்தியாவும், வங்கதேசமும் விவாதிக்க வேண்டிய முக்கியமான பிரச்சினைகள் உள்ளன.
இந்தச் சந்திப்பு, இருநாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.