ரயில் நிலைய பெயர் பலகையில் இடம்பெற்ற இந்தி எழுத்துகள் அழிப்பு : திமுக நிர்வாகி உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு!
பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிக்கப்பட்ட விவகாரத்தில் திமுக நிர்வாகி உட்பட 7 பேருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதித்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையில் இடம்பெற்ற இந்தி எழுத்துக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பு மை பூசி அழிக்கப்பட்டன.
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது திமுக மாநில நிர்வாகி ராஜவர்மன் உட்பட 7 பேர் இந்தி எழுத்துகளை அழித்தது தெரியவந்தது.
இதையடுத்து 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திமுக மாநில நிர்வாகி உட்பட 7 பேருக்கும் ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.