For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

07:00 PM Nov 05, 2025 IST | Murugesan M
ரூ 1 லட்சம் கோடி அறிவித்த மோடி   ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா

தனியார் துறையில் முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு நிதியத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். ஆராய்ச்சி செய்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தச் சிறப்புத் திட்டத்தின் மூலம் உலகளாவிய புதுமையின் மையமாக இந்தியா மாறும் என்று கூறப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

பரந்த அடிப்படையிலான தனியார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இல்லாமல், உயர்  தொழில்நுட்ப பொருளாதாரத்தை எந்த ஒரு தேசத்தாலும் உருவாக்க முடியாது. வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை நிரந்தரமாகச் சார்ந்து இருக்கும் நிலையை மாற்றும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

Advertisement

வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிச் செல்வதற்காக, கொள்கை வகுப்பாளர்கள் கண்டுபிடிப்பாளர்கள், மற்றும் சர்வதேச தொழில்நுட்ப அறிஞர்கள்,நோபல் பரிசு பெற்றவர்கள், புகழ்பெற்ற விஞ்ஞானிகள் பங்கேற்ற முதல் எமர்ஜிங் சயின்ஸ் டெக்னாலஜி மற்றும் இன்னோவேஷன் மாநாடு டெல்லியில் நடைபெற்றது.

இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியத்தைத் தொடங்கி வைத்துள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.64 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காகச் செலவழிக்கப் படுகிறது. இதிலும் தனியார் துறையின் பங்கு மிகக் குறைவானதாகும்.

Advertisement

இந்தச் சூழலில் அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு நான்கு மாதங்களுக்குள் நடைமுறைக்கு வந்த இந்தச் சிறப்பு நிதி திட்டம், ஆராய்ச்சியை மேம்படுத்தும் ஒரு கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய மைல்கல்லாகும். இந்த நிதியத்தின் அமைச்சகமாக மத்திய அறிவியல் மற்றும் தொலைநுட்பத் துறையே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான மொத்த தொகையில் 2025-2026ம் நிதியாண்டில் முதல் கட்டமாக 20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைத் திட்டத்தில்,அடையாளம் காணப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பத் துறைகளில், எரிசக்தி பாதுகாப்பு, காலநிலை நடவடிக்கை மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகள் முதன்மைப் பெறுகின்றன.

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள Special Purpose Fund முதன்மைப் பாதுகாவலராக செயல்படும் என்றும், அது நேரடியாகத் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யாது என்றும் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் நிலைத் தொழில்முறை நிதி மேலாளர்களாக அமைக்கப்பட்டுள்ள மாற்று முதலீட்டு நிதிகள்,மேம்பாட்டு நிதி நிறுவனங்கள்,, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், BIRAC மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் வழியாகவே நிதி அளிக்கப்படும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

அதே நேரத்தில் அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழு, நிர்வாகக் குழு மற்றும் முதலீட்டுக் குழுக்கள் துறை ஒப்புதல்கள், நிதி மேலாளர்  தேர்வு, திட்ட மதிப்பீடு மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் மதிப்பாய்வுக்குப் பொறுப்பேற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை மற்றும் விண்வெளித் துறைக்கான மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர  சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்தச் சிறப்பு நிதியம் திட்டத்துக்குப் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆராய்ச்சியை வணிகமயமாக்குவதில் இந்தியாவுக்கு உதவுவதன் மூலம், பாதுகாப்பு, செமிகண்டக்டர் மற்றும் உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இறையாண்மைத் திறன்களை உருவாக்க இந்தத் திட்டம் உதவும் என்று தொழில் துறை முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இந்தியாவின் புதுமைச் சுற்றுச்சூழலில், குறிப்பாக ஜென் Z-க்கான ஒரு தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தக்கூடிய திருப்புமுனையாகும். தொழில்நுட்ப தடைகளைத் தாண்டி புதுமைகளைப் படைக்கவும், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கவும், வெளிநாட்டுச் சார்புநிலையைக் குறைக்கவும், தொழில்நுட்ப தன்னிறைவு பெறவும், உலகளாவிய மதிப்புச் சங்கிலி உருவாக்கவும், இந்தத் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கானது என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் தயாரிப்பது முதல் இந்தியாவில் கண்டுபிடிப்பது வரை நாட்டின் வளர்ச்சி வரலாறு நாடெங்கும் உள்ள ஆய்வகங்கள், உற்பத்தி ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளில் மீண்டும் நவீனமாக எழுதப்பட்டு வருகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதல் மற்றும் விண்வெளி நிறுவனங்கள் வரை அனைவரும் “Innovate for India, Innovate from India என்ற ஒரே குறிக்கோளுடன், ஒரே தொலைநோக்குப் பார்வையுடன் முன்னேறுகின்றனர்.

மத்திய அரசு மூலதனமாக 1 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கியுள்ளது. SEBI வெளிப்படைத்தன்மையை BRSR கட்டமைப்பு மூலம் வழங்கியுள்ளது. நிறுவனங்கள் உந்துசக்தியும் விருப்பமும் கொண்டுள்ளது. இதனால், "நுகர்வோர்" என்பதிலிருந்து தொழில்நுட்பத்தின் "முன்னோடி"யாக இந்தியா எளிதில் மாறும் என்று கூறப்படுகிறது.

Advertisement
Tags :
Advertisement