ரூ.10,000 லஞ்சம் பெற்ற நகரமைப்பு ஆய்வாளருக்கு 7 ஆண்டுகள் சிறை!
மத்திய அரசுத் திட்டத்தில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் நாகப்பட்டினம் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் பகுதியைச் சேர்ந்த இளங்கோ, கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அரசுத் திட்டத்தின்கீழ் வீடு கட்டியுள்ளார்.
இதற்கு அரசு தரப்பில் வழங்க வேண்டிய காசோலையை வழங்காமல் நகரமைப்பு ஆய்வாளரும், திமுக தலைமை கழக பேச்சாளருமாக இருந்த நாகராஜன் அலைக்கழித்துள்ளார்.
மேலும், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து இளங்கோவன் புகாரளித்த நிலையில், நாகராஜனை அதே ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கானது திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நாகராஜன், நாகப்பட்டினம் நகராட்சியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இதற்கிடையே, நாகராஜன் மீதான குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து, அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பளித்தார்.