ரூ.25 கோடி அம்போ : குப்பை மேடாக மாறிய சிட்லபாக்கம் ஏரி!
25 கோடி ரூபாய் மதிப்பில் அழகுபடுத்தப்பட்ட சிட்லபாக்கம் ஏரி தற்போது முறையான பராமரிப்பின்றி குப்பை மேடுகளாகக் காட்சியளிக்கிறது. ஏரியில் கலக்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தாம்பரம் மாநகராட்சியில் இருக்கும் 15 நீர்நிலைகளில் முக்கியமானதாக விளங்குகிறது இந்த சிட்லப்பாக்கம் ஏரி. மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டிருந்த இந்த ஏரி தற்போது ஆக்கிரமிப்பில் சிக்கி படிப்படியாகச் சுருங்கத் தொடங்கியுள்ளது.
ஏரியைச் சுற்றிலும் கொட்டப்படும் குப்பைகள் மலைபோல குவிந்திருப்பதோடு, ஏரியில் கலக்கும் கழிவுநீரால் அப்பகுதி நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின் போது அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் முன்னெடுப்பில் சிட்லபாக்கம் ஏரியை மறுசீரமைக்க 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின.
பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தபின்பு மந்தமான அப்பணிகள் பொதுமக்களின் போராட்டத்திற்குப் பின் நிறைவு பெற்றன. உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் நடைப்பயிற்சிக்காகப் பூங்காவைப் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது குவிந்திருக்கும் குப்பைகள் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கழிவுநீர் கால்வாயிலிருந்து எடுக்கப்பட்டு தரைப்பகுதியிலேயே கொட்டப்படும் கழிவுகளால் 25 கோடி ரூபாய் மதிப்பில் தூய்மையாக்கப்பட்ட ஏரி மீண்டும் அசுத்தமடையத் தொடங்கியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட பூங்காவில் மக்களுக்குத் தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.
தாம்பரம் பகுதி மக்களின் சிறந்த பொழுதுபோக்கு தளமாகவும், சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் சிட்லப்பாக்கம் ஏரி மற்றும் அதனை ஒட்டிய பூங்காவை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.