For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ரேடாரால் பார்க்க முடியாது : சீனா கண்டுபிடித்த 'கொசு' ட்ரோன்!

09:00 PM Jun 26, 2025 IST | Murugesan M
ரேடாரால் பார்க்க முடியாது   சீனா கண்டுபிடித்த  கொசு  ட்ரோன்

ரேடாரால் மட்டுமல்ல மனிதர்களின் கண்களால் கூட  கண்டுபிடிக்க முடியாத  கொசு அளவிலான ட்ரோனை சீனா கண்டுபிடித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

எதை எடுத்தாலும், அமெரிக்காவுக்குச் சவால் விடும் வகையில் சீனா தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. அதனால் தான் உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடாகச் சீனா விளங்குகிறது. சமீபத்தில், புதிய ரக மைக்ரோ ட்ரோனை வடிவமைத்துள்ளது.

Advertisement

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள தேசியப் பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (NUDT) ரோபோடிக்ஸ் ஆய்வகத்தில் சீன விஞ்ஞானிகள் ஒரு மினி ட்ரோனை உருவாக்கியுள்ளனர். எதிர்காலத்திற்கான உயிரினம் சார்ந்த ரோபோக்கள் உருவாக்கும் திட்டத்தின்  ஒரு பகுதியாக இதை விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.

சீனாவின் ராணுவத் தொலைக்காட்சியில், இந்த மைக்ரோ ட்ரோனின் முன்மாதிரி நேரலையில் பொதுமக்களுக்கு விளக்கப் பட்டுள்ளது. அந்த நேரலையில், தேசியப் பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மாணவர் லியாங் ஹேஷியாங் (Liang Hexiang), தனது கையில் கொசு போன்ற ரோபோ உள்ளது என்றும், இதுபோன்ற சிறிய ரோபோக்கள், போர் களத்தில் தகவல் திரட்டல் மற்றும் சிறப்பு கண்காணிப்பு செயல்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று விளக்கியுள்ளார்.

Advertisement

இந்த மினி ட்ரோனில் மிகவும் மெலிதான நடுப் பகுதியும், இலைபோன்ற சிறிய இரு இறக்கைகளும், மற்றும் கொசுவின் கால்களைப் போன்று மூன்று மெல்லிய கால்களும் உள்ளன. இது Biomimetic Design என வடிவமைக்கப் பட்டுள்ளது.

இரு விரல்களுக்கு நடுவே பிடிக்கக் கூடிய கொசு அளவிலான இந்த ட்ரோன்,  சின்ன உளவுத் தேவைகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெரும் ட்ரோன்கள் மாட்டிக்கொள்ளக்கூடிய இடங்களில் – நகர்ப்புறம், எதிரியின் கட்டிடங்கள் அல்லது கேமிராவுக்குப் புலப்படாத இடங்களில் இந்த சிறிய ட்ரோன் நுழைந்து தகவல்களைச் சேகரிக்க முடியும்.

சிறிய வடிவம் காரணமாக அதை விட சிறியதாக உள்ள  சென்சார்கள், மின் சாதனங்கள், கட்டுப்பாட்டு சுற்றுகள் ஆகியவற்றை இந்த மினி ட்ரோனில் பொருத்துவது பெரும் சவாலாக இருந்துள்ளது. சுமார் 1.3 சென்டிமீட்டர் நீளம் உடைய இந்த மினி ட்ரோனை ஒரு ஸ்மார்ட் போன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

போர்களம் மற்றும் பிற இடங்களில் உளவு வேலை போன்ற இரகசிய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் நோக்கில், சாதாரணமாக வெறும் கண்களுக்கும் சிக்காத இந்த சிறிய ட்ரோன் உருவாக்கப்பட்டுள்ளது.

மிகச் சிறிய அளவில் இருப்பதால், மிகச் சிறிய இடத்துக்குள் கூட ஊடுருவிக் கண்காணிப்புப் பணியில் இந்த ட்ரோனை பயன்படுத்த முடியும் என்று கூறப் படுகிறது. இதுதவிர,  பீரங்கி-பொருத்தப்பட்ட UAVகளையும் சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அவை, போர்க்களத்தில் 155 மிமீ பீரங்கி குண்டுகளிலிருந்து  ஏவப்படும் போது அதன் தீவிர சக்தியைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த சாதனங்கள் அவற்றின் எடையை விட 3,000 மடங்கு வரை அழுத்தத்தைத் தாங்கும், இதனால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அமைப்புகளில் பயன்படுத்த போதுமான வலிமையானவை

சீனாவே "Mosquito" mini drone என புதிய சிறிய ட்ரோன்களை உருவாக்கும் நிலையில், பிற நாடுகளும் இதே போன்று சிறிய ட்ரோன்களை தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.  குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு,அமெரிக்க விமானப்படை, தனது சொந்த சிறிய ட்ரோன் திட்டத்தை அறிவித்தது. என்றாலும் அது பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை பெரிதாக வெளிவரவில்லை.

நார்வே நாட்டின் Black Hornet எனப்படும் மினி ட்ரோன் ஹெலிகாப்டர் வடிவிலானது.இது கையில் பிடித்துக்கொள்ளக்கூடிய அளவிலான, இந்த ட்ரோன், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் இராணுவத்தில் பயன்படுத்தப் பட்டு வருகிறது. Teledyne FLIR Defence நிறுவனம் தயாரித்துள்ள இந்த Black Hornet 4, இந்த ஆண்டுக்கான Blue UAS Refresh விருதைப் பெற்றுள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் RoboBee எனும் சிறிய ரோபோவை உருவாக்கியுள்ளனர். இந்த சிறிய  ரோபோ பறவையால் , நீரில் மிதக்கவும், நீரிலிருந்து உயர்ந்து மேலே பறக்கவும், முடியும். கூடுதலாக மின் ஈர்ப்பு கொண்டு சுவர் மீது அமரவும் முடியும். பல்வேறு மருத்துவ மற்றும் சுற்றுச்சூழல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் இந்த  RoboBee  உருவாக்கப்பட்டுள்ளது.

மருத்துவத் துறையில் இந்த சிறிய அளவிலான ட்ரோன்கள், நோயாளியின் உடலில் நுழைந்து மருந்துகளைச் செலுத்தவும், உள்ளுறுப்பு சோதனைகளைத் திறம்படச் செய்யவும் பயன்படுகிறது.  உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் நீர் போன்ற உள்ளீடுகளைத் தேவைப்படும் இடங்களில்,தேவைப்படும் நேரங்களில் துல்லியமாகப் பயன்படுத்தவும், பயிர்களின் ஆரோக்கியம் தொடர்பான கண்காணிப்புக்கும் இந்த சிறிய அளவிலான ட்ரோன்கள் பயன்படுகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேலாண்மை, கண்காணிப்பு, மேற்பார்வை மற்றும் கட்டுமானத் திட்டங்களின் அவசரநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிலும் இந்த சிறிய ட்ரோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன.   நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளையும் சிறிய அளவிலான ட்ரோன்கள் எளிதாக்குகின்றன.

ரோபாட்டிக்ஸ் எதிர்காலம் இனி பெரிய இயந்திரங்களால் ஆனதில்லை. கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு மிகச் சிறிய இயந்திரங்களால் ஆனதாகும். காற்றில் பறப்பதும், தண்ணீரில் மிதப்பதும் மேலும் உடலின் இரத்த ஓட்டத்தில் ஓடுவதும் எனச் சிறிய அளவிலான ட்ரோன்கள் உலகத்தின் போக்கையே நவீனமாக்கி உள்ளது.

Advertisement
Tags :
Advertisement