For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

07:55 PM Jun 05, 2025 IST | Murugesan M
ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை   அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு

நியாயவிலைக்கடைகளில் முன்னறிவிப்பின்றி கடைப்பிடிக்கப்படும் புதிய நடைமுறையால் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் வேளையில் அத்தியாவசியப் பொருட்களுக்காக நியாய விலைக்கடைகளை நாடும் பொதுமக்களுக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் தமிழக அரசின் புதிய நடைமுறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையால் 38 ஆயிரத்து 411 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் விநியோகம் செய்வதில் முக்கிய பங்காற்றி வரும் நியாயவிலைக்கடைகளில் முன்னறிவிப்பின்றி அமலாகியிருக்கும் புதிய நடைமுறையால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

பில் போடுவதற்காகப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தோடு, பொருட்களை எடையிடும் இயந்திரமும் வைபையில் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் மூலம் பொருட்களைப் பெற 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நியாயவிலைக்கடையில் காத்திருக்க வேண்டிய சூழலுக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், டிஜிட்டல் மயமாக்கல் எனக்கூறி ஏற்கனவே எளிதாக இருந்த நடைமுறையை மாற்றியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் வைபையில் தொழில்நுட்ப கோளாறுகளும் அடிக்கடி ஏற்படுவதால் பொதுமக்களுக்கும்  ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்படுகிறது.

Advertisement

எந்தவித முன்னறிவிப்புமின்றி அமலுக்கு வந்திருக்கும் இந்த புதிய முறை குறித்து உரியப் பயிற்சி வழங்காத காரணத்தினால் அதனைக் கையாளுவதில் நியாயவிலைக்கடை ஊழியர்களுக்குச் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. நியாய விலைக்கடை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையை எளிமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் அரசு செவிசாய்க்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு விண்ணை முட்டிக் கொண்டிருக்கும் நிலையில், குறைந்த விலையில் அப்பொருட்களைப் பெற நியாய விலைக்கடைகளை நாடி வரும் ஏழை, எளிய மக்களுக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த புதிய நடைமுறை அமைந்திருக்கிறது. பழைய நடைமுறையோ, புதிய நடைமுறையோ எதுவாக இருந்தாலும் தங்களுக்கான பொருட்களை நேரவிரயமின்றி பெறுவதற்கு ஏதுவாக எளிமையான நடைமுறையாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement
Tags :
Advertisement