லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு அமல் - கலவரத்தை நகர மேயர் தான் தூண்டி விடுவதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற போராட்டங்கள் அமைதி மற்றும் தேசிய இறையாண்மை மீதான தாக்குதல் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியுள்ளவர்கள் மற்றும் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை கைது செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 7ஆம் தேதி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பல்வேறு அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது. குடியேற்ற கொள்கையை கண்டித்து நடக்கும் போராட்டத்தை ஒடுக்க 2 ஆயிரம் அதிரடிப்படையினர் மற்றும் 700 கடற்படை வீரர்களை டிரம்ப் அனுப்பி வைத்தார்.
இதனிடையே, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தின்போது தேசியக்கொடியை எரித்தவர்கள் ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண மேயர் திறமையற்றவர் என்றும், போராட்டத்தில் பங்கேற்க கிளர்ச்சியாளர்களுக்கு மேயர் பணம் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனிடையே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், போராட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.