For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வங்கதேசத்தில் நடந்தது என்ன? : அம்பலமாகும் CIA சதி - துணை போன ராணுவம்!

09:00 PM Nov 05, 2025 IST | Murugesan M
வங்கதேசத்தில் நடந்தது என்ன    அம்பலமாகும் cia சதி   துணை போன ராணுவம்

CIA-வின் ஏஜெண்டான வங்கதேசத்தின் ராணுவத் தலைவர் வேக்கர்-உஸ்-ஜமான், ஷேக் ஹசீனாவின் ஆட்சியைக் கவிழ்த்தார் என்று அந்நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமல் தெரிவித்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

டீப் ஹால்டர், ஜெய்தீப் மஜும்தார் மற்றும் சாஹிதுல் ஹசன் கோகோன் ஆகிய மூன்று பேர் எழுதியுள்ள Inshallah Bangladesh: The Story of an Unfinished Revolution’ (('இன்ஷால்லா பங்களாதேஷ்: தி ஸ்டோரி ஆஃப் அன் ஃபினிஷ்டு ரெவல்யூஷன்')) என்ற புத்தகம் இன்னும் வெளிவரவில்லை. அதற்கு முன்பே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அதற்குக் காரணம் இந்தப் புத்தகத்தில், வங்கதேசத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமல் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். தெற்காசியாவைப் பொறுத்தவரை இந்தியாவில் பிரதமர் மோடி, சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் வங்க தேசத்தில் ஷேக் ஹசீனா ஆகிய வலிமை மிக்க தலைவர்கள் ஆட்சியில் இருப்பதை, அமெரிக்கா விரும்பவில்லை என்று கூறியுள்ள கான் கமல், வங்கதேசத்திடமிருந்து செயிண்ட் மார்ட்டின் தீவை அமெரிக்கா கைப்பற்ற நினைக்கிறது என்றும், அதற்காக சிஐஏவின் ஏஜெண்டான ராணுவத் தலைவர் வேக்கர்-உஸ்-ஜமானை வைத்துத் திட்டமிட்டு ஷேக் ஹசீனாவின் ஆட்சியைக் கவிழ்த்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறிப்பாகப் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பும், ஜமாத்-இ-இஸ்லாமி பங்களாதேஷும் இணைந்து ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தைப் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டதாகவும், ஐ.எஸ்.ஐ.யின் ஈடுபாடுகுறித்து ஷேக் ஹசீனாவைத் தாம் எச்சரித்ததாகவும் ஆனால் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்று வேக்கர் உறுதியளித்ததாகவும் கமல் கான் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், வங்கதேசத்தின் உளவுத்துறை அமைப்புகள் வேக்கரின் துரோகம்குறித்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவை வேண்டுமென்றே எச்சரிக்கத் தவறிவிட்டதாகவும் கான் கமல் குறிப்பிட்டுள்ளார். ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு முந்தைய நாள், ராணுவம் பிரதமரின் வீட்டைப் பாதுகாக்கும் என்று வேக்கர், தமக்கும் முன்னாள் பிரதமருக்கும் உறுதியளித்ததாகக் குறிப்பிட்டுள்ள கண் கமல், மறுநாள் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ வீட்டைச் சூறையாடியதை வேக்கர் வேடிக்கை பார்த்ததாகவும், வேறுவழியில்லாமல் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதே புத்தகத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாகப் பல கருத்துக்களும் செய்திகளும் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் அமெரிக்கர்களின் உத்தரவின் பேரில் வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டத்தைப் பயங்கரவாதத் தாக்குதல் என்று கூறியுள்ள ஷேக் ஹசீனா, சதி செய்தல், நிதியளித்தல் மற்றும் செயல்படுத்தியதன் பின்னணியில் முகமது யூனுஸ் இருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படும் ஏமாற்றுக்காரரான முகமது யூனுஸ் நாட்டின் இடைக்கால தலைவராகி, வங்கதேசத்தையே கொள்ளையடிப்பதாக ஷேக் ஹசீனா கூறியுள்ளார். முன்னதாக, ஷேக் ஹசீனா, தாம் டெல்லியில் இருப்பதாகவும், 'சட்டபூர்வமான' அரசு அமைக்கப்பட்டதும் வங்கதேசத்துக்குத் திரும்பி வந்து, தேசத்தைக் காட்டிக் கொடுத்த துரோகிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி நீதி வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவாமி லீக் கட்சி தடை செய்யப்படும் பட்சத்தில், அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற உள்ள பொது தேர்தலை, அவாமி லீக் கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் தனது ஆதரவாளர்கள் புறக்கணிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Advertisement