வங்கதேச சணல் - இறக்குமதிக்கு தடை!
இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் வங்கதேசத்தில் இருந்து சணல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடைவிதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ஏன் இந்த நடவடிக்கை ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சிறுபான்மையினர், குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதல்களைக் கட்டுப்படுத்தத் தவறிய, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், அடிக்கடி இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாகவே இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ளன. கூடுதலாக இருநாடுகளுக்குமான வர்த்தக உறவும் பாதிப்படைந்துள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற ஆறாவது பிம்ஸ்டெக் (BIMSTEC) உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியை வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் சந்தித்தார். அதன்பிறகு இருநாடுகளுக்கும் இடையேயான அரசு மற்றும் வர்த்தக உறவுகள் மேம்படும் என எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால்,அதன் பிறகும் வங்கதேசத்தின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு எதிராகவே இருந்தன. இந்தியாவின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை வடகிழக்கு மாநில எல்லைகள் மூலம் வங்கதேசத்துக்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு தடை விதித்தது.
2020ம் ஆண்டு முதல் வங்கதேசப் பொருட்களை இந்தியா வழியாக ஏற்றுமதி செய்யும் transshipment வசதி நடைமுறையிலிருந்துவந்தது. இதனால் தான், இந்திய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைப் பயன்படுத்தி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் பல்வேறு வேறு நாடுகளுக்கு வங்கதேசம் ஏற்றுமதி செய்யவந்தது.
கடந்த ஏப்ரல் 9ம் தேதி, நேபாளம், பூட்டான், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா தவிர பல்வேறு நாடுகளுக்கு பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக வங்கதேசத்துக்கு வழங்கிய (transshipment ) டிரான்ஷிப்மென்ட் வசதியை இந்தியா அதிரடியாகத் திரும்பப் பெற்றது. தொடர்ந்து, கடந்த மே 17 ஆம் தேதி, வங்கதேசத்திலிருந்து ஆயத்த ஆடைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்தது.
கிராமப்புற வாழ்வாதாரத்தின் அடித்தளமாக இந்தியச் சணல் துறை உள்ளது. குறிப்பாக, தேசிய உற்பத்தியில் 78 சதவீதம் மேற்கு வங்க கிராமங்களின் பங்களிப்பாகும். மேற்கு வங்கம் தவிரப் பீகார், அசாம், ஒரிசா, ஆந்திரா, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் மூல சணல் உற்பத்தி செய்யப்படுகிறது. சணல் தொழில் துறையில், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகள் மற்றும் மறைமுகமாக சுமார் பல லட்சம் விவசாயக் குடும்பங்கள் பயனடைகின்றன.
கூடுதலாக, இந்தியாவின் சணல் உற்பத்தியில் கிட்டத்தட்ட 90 சதவீதம் உள்நாட்டிலேயே பயன்படுத்தப் படுகிறது. இதில் பெரும்பாலான பொருட்களை அரசே கொள்முதல் செய்து வருகிறது. தெற்காசியச் சுதந்திர வர்த்தகப் பகுதி (SAFTA) ஒப்பந்தத்தின் கீழ், வங்கதேசத்தின் சணல் ஏற்றுமதிகள் தற்போது இந்தியச் சந்தையில் வரி இல்லாத சலுகையைப் பெறுகின்றன. இதனால், மானிய விலையில் வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சணல் நூல், நார், நெய்த துணிகள் மற்றும் பைகள் ஆகியவை இந்தியச் சணல் துறையைப் பாதிக்கின்றன.
இதனைத்தொடர்ந்து, வங்கதேசத்தில் இருந்து வரும் சணல் மற்றும் தொடர்புடைய பொருட்கள் மீது குவிப்பு எதிர்ப்பு வரிகள் விதிக்கப்பட்டன. ஆனாலும், இது வங்கதேசத்தில் இருந்துவரும் சணல் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவில்லை.
வரி விதிக்கப்படுவதற்கு முன்பு 2016-17 நிதியாண்டில் 138 மில்லியன் டாலராக இருந்த இறக்குமதி, 2021-22 நிதியாண்டில் 117 மில்லியன் டாலராக ஓரளவு குறைந்தது. கடந்த நிதியாண்டில் சுமார் 144 மில்லியன் டாலராக இறக்குமதி உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் சணலின் விலை ஒரு குவிண்டாலுக்கு 5,000 ரூபாய்க்கும் கீழே சரிந்தன.
வங்கதேசத்தில் இருந்து மலிவான, மானிய விலையில் சணல் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதன் காரணமாக, இந்தியச் சணல் தொழிலாளர்களின் வருமானம் நேரடியாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இந்தியச் சணல் ஆலைகள் நஷ்டத்தைச் சந்திக்கின்றன. அதன் காரணமாகச் சணல் ஆலைகள் மூடப்படுவதால் ஜவுளித்துறையில் வேலை கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
எனவே, வங்கதேசத்திலிருந்து சணல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நார்ப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் துறைமுகக் கட்டுப்பாடுகளை உடனடியாக அமல்படுத்த இந்தியா முடிவு செய்தது.
வங்கதேசத்தில் இருந்து சணல் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியாவில் தடை விதிக்கப் பட்டுள்ளது. மேகாலயா, அசாம், திரிபுரா மற்றும் மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில எல்லையில் தரை வழியாக எந்தவொரு பொருளையும் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள நவா ஷேவா துறைமுகத்தைத் தவிர, நாடு முழுவதும் உள்ள அனைத்து நிலம் மற்றும் துறைமுகங்களுக்கும் இந்த தடை உத்தரவு செல்லும் என்றும், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுப்பது, ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், உள்நாட்டுச் சணல் பொருளாதாரத்துடன் பிணைக்கப் பட்டுள்ள கிராமப்புற பொருளாதாரத்தைப் பாதுகாப்பது என்ற நோக்கத்தின் காரணமாக இந்த புதிய நடவடிக்கை எடுக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான 770 மில்லியன் டாலர் அளவுக்கு வங்கதேச ஏற்றுமதியை பாதிப்புள்ளாகும் என்று உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சியின் (GTRI) நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ஜவுளித் துறையில் கூடுதலாக 2,000 கோடி ரூபாய் அளவுக்கு மேல் கூடுதல் வணிகம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் உள்ள ஏற்றுமதியாளர்கள், மூன்றாம் நாடுகள் வழியாகச் சணல் ஏற்றுமதி செய்வதைத் தடுக்கவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.