For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வனத்துறை அலட்சியம் : வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த யானை!

08:35 PM May 21, 2025 IST | Murugesan M
வனத்துறை அலட்சியம்   வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த யானை

கோவை மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு இறந்த யானையின் வயிற்றில் 15 மாத குட்டி யானை இருந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானை கருவுற்றதை கூட அறியாமல் மூன்று நாட்கள் வனத்துறையினர் வழங்கிய சிகிச்சை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும்  குப்பைக் கழிவுகள் அனைத்தும் மலை அடி வாரத்தில் கொட்டப்படுகின்றன.

Advertisement

அவ்வாறு கொட்டப்படும் கழிவுகளையே உணவாக உண்டு வந்த பெண் யானை உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலை அடிவாரத்தில் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானைக்கு வனத்துறை சார்பாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஹைட்ரோ தெரபி சிகிச்சை, நரம்பு வழி சிகிச்சை உட்பட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டதோடு, செயற்கை குளத்தை உருவாக்கி அதில் இறக்கிய ஒரு மணி நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி யானை உயிரிழந்தது.

Advertisement

யானையின் உடலுக்குள் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளே உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. அதனைத் தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்திய கள ஆய்வும் உறுதிப்படுத்தியது.

இறந்த யானைக்கு நடைபெற்ற பிரதேப்பரிசோதனையில் மற்றொரு அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஏற்கனவே கருவுற்றிருந்த அந்த யானையின் உடலில் 15 மாத குட்டி யானை இருந்திருப்பது பிரேதப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

கருவுற்றிருப்பதைக் கூட அறியாமல் அந்த யானைக்குக் கடந்த மூன்று நாட்களாக வனத்துறையினர் சிகிச்சை அளித்திருப்பது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.

உடல்நலக்குறைவால் உயிரிழந்த யானையின் உடல்நிலையை முழுமையாகப் பரிசோதிக்காமல் சிகிச்சை வழங்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கத் தொடங்கியுள்ளது.

Advertisement
Tags :
Advertisement