For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வனப்பகுதியில் உணவுத்தட்டுப்பாடு : ஊருக்குள் புகும் கரடிகள் - சேதமாகும் பயிர்களால் விவசாயிகள் வேதனை!

08:35 PM Jun 10, 2025 IST | Murugesan M
வனப்பகுதியில் உணவுத்தட்டுப்பாடு   ஊருக்குள் புகும் கரடிகள்   சேதமாகும் பயிர்களால் விவசாயிகள் வேதனை

நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதியில் நிலவும் உணவுத் தட்டுப்பாட்டால் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து சேதப்படுத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. மனித விலங்கு மோதலுக்கான அடிப்படை காரணமாக அமைந்திருக்கும் உணவுத் தட்டுப்பாடு குறித்தும், அதற்கான காரணங்கள் பற்றியும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகத் திகழும் நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதி யானை, கரடி, சிறுத்தை, புலி, மான் என ஏராளமான வனவிலங்குகளின் வாழ்விடமாக விளங்கிவருகிறது.

Advertisement

அத்தகைய வனப்பகுதிகளில் வசிக்கும் விலங்குகள் போதிய உணவின்மை காரணமாக ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளையும், விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களையும் சேதப்படுத்தி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர், குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் உணவு தேடி வரும் கரடிகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது.

உணவு தேடி ஊருக்குள் புகும் கரடிகள், ஹோம் மேட் சாக்லெட் தொழிற்சாலை, பேக்கரி, தேயிலைத் தோட்டங்கள் மட்டுமல்லாது கோயிலில் உள்ள பிரசாதங்களையும் உண்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாகக் கரடிகள் ஊருக்குள் வருவது தொடர்பாக ஆவணக் காப்பகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

வனப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் உணவுத் தட்டுப்பாடே கரடிகள் ஊருக்குள் நுழைய முக்கிய காரணம் எனக் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் பழ மரங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதும், தேன்களை விற்பனைக்காக மக்கள் எடுத்துச் செல்வதும் கரடிகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட மற்றொரு காரணமாகவும் அமைந்திருக்கிறது. மனித விலங்கு மோதலுக்கு வழிவகுக்கும் இத்தகைய செயல்பாடுகளைத் தவிர்க்க ஆவண காப்பகத்தினர் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்

வீடுகளில் சேகரிக்கப்படும் உணவுக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் வனப்பகுதியின் எல்லையோரத்தில் கொட்டப்படுவதும் கரடிகள் ஊருக்குள் வருவதற்குக் காரணமாகவும் கூறப்படுகிறது. மனித விலங்கு மோதல்கள் அதிகரிக்கும் முன்பாகவே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வனவிலங்குகளின் உணவுத் தேவையை வனத்துறை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement