For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

07:45 PM Jun 15, 2025 IST | Murugesan M
வனவிலங்குகளுக்கு பாதிப்பு    நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தைப் போலவே கோவை மாவட்டம் மருதமலையையும் நெகிழி பயன்பாடு இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழிப்பைகளுக்குத் தடைவிதிக்க வேண்டிய அவசியம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழகத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக்கத் திகழும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் இல்லாத நீலகிரி மாவட்டம் என்ற இலக்கை அடைய அடையும் நோக்கில் அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் நிலையில், அதே நடவடிக்கையைக் கோவை மாவட்டம் மருதமலையிலும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.

Advertisement

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாகக் கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், அங்கு பிளாஸ்டிக் பைகளின் புழக்கம் அதிகளவு காணப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளுக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.

நெகிழிப் பைகளுக்குத் தடை என்ற பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தாலும், அதற்கான நடைமுறைகள் முறையாகக் கண்காணிக்கப்படாததால், பயன்படுத்திவிட்டு வனப்பகுதியில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. நெகிழிப்பைகள் பயன்பாடு இல்லாத மருதமலை என்ற சூழலை உருவாக்கக் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் சோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது

Advertisement

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையையும் மீறி உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படுவதே அதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் புகழ்பெற்ற மருதமலை கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளிடம் நெகிழிப் பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, வனவிலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழிப் பைகளை முற்றிலுமாக ஒழிக்கக் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement