For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வரலாற்று சாதனை - முருக பக்தர்களின் சங்கமம்!

08:45 PM Jun 23, 2025 IST | Murugesan M
வரலாற்று சாதனை   முருக பக்தர்களின் சங்கமம்

எத்தனையோ இடையூறுகள், எண்ணிலடங்கா தடைகள் என அனைத்தையும் தகர்த்தெறிந்து ஒரு மாநாடு எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக நடைபெற்று முடிந்திருக்கிறது இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாடு. அடிப்படை வசதிகள் தொடங்கி பக்தர்களை வழிநடத்தத் தன்னார்வலர்கள் வரை சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

நாம் எந்த வடிவில் விரும்புகிறோமோ அந்த வடிவிலேயே நம்மை ஆட்கொள்பவராக, பக்தர்கள் விரும்பிய வேண்டும் வரங்களை வேண்டியவரே அருள்பவராக, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுபவராக நம் மனங்களில் நினைந்திருக்கும் முருகப் பெருமான் நாம் நாள்தோறும் வணங்கிடும் தமிழ்க் கடவுளாகத் திகழ்கிறார். அத்தகைய முருகப்பெருமான் குடியிருக்கும் அறுபடை வீடுகளையும், அவர் காட்சியளிக்கும் அனைத்து திருக்கோயில்களையும் பாதுகாக்க வலியுறுத்தி குன்றம் காக்க, கோயிலைக் காக்க எனும் தலைப்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்த இந்து முன்னணி முடிவு செய்தது.

Advertisement

மதுரை மாவட்டம் பாண்டிகோயில் அருகே உள்ள அம்மா திடலில் மாநாட்டிற்கான கால்கோல் நடும் விழாவில் தொடங்கி அறுபடை வீடுகள் அமைத்து பூஜை செய்வதற்கான அனுமதி வரை காவல்துறை விதிக்காத கட்டுப்பாடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான இடையூறுகள் திமுக அரசால் வழங்கப்பட்டன.

பழனியில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் நடைபெற்ற முருகர் மாநாட்டை விட இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக அமைந்து விடக்கூடாது என்பதே இடையூறுகளுக்கு முக்கிய காரணமாகவும் கூறப்பட்டது.  காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்  அனைத்தையும் நீதிமன்றத்தின் மூலமாக இந்து முன்னணி தகர்த்தெறிந்து மாநாட்டிற்கான பணிகளை முடுக்கிவிட்டது.

Advertisement

மாநாடு தொடங்குவதற்கு ஒரு வாரக் காலத்திற்கு முன்பாகவே  முருகப்பெருமானின் அறுபடை வீடுகளும் அச்சு அசலாக மைதானத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்தன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் சென்றுவர முடியுமா என ஏங்கிக் கொண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இந்து முன்னணி ஏற்பாடு செய்திருந்த முருக பக்தர்கள் மாநாடு வரப்பிரசாதமாக அமைந்தது. அலை அலையாக, சாரை சாரையாகத் தமிழகம் மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து ஒரே இடத்தில் காட்சியளித்த அறுபடை வீடுகளையும் வணங்கிச் சென்றனர்.

மாநாட்டிற்கான நாள் நெருங்க நெருங்க திமுக அரசின் நெருக்கடியும் இடையூறுகளும் அதிகரிக்கத் தொடங்கியது. காவல்துறையின் மூலம் அடுத்தடுத்த கட்டுப்பாடுகளால் இந்து முன்னணி நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில், மாநாட்டிற்கு இடையூறுகளை வழங்க முற்பட்ட தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சம்பட்டி அடிகளை வழங்கும் வகையிலான தீர்ப்பை அடுத்தடுத்து நீதிமன்றம் வழங்கியது.

8 லட்சம் சதுர அடி பரப்பு கொண்ட மைதானத்தில் முருகப்பெருமானின் முழு உருவத்தைத் தாங்கிய வடிவில் பிரம்மாண்ட மேடை, லட்சக்கணக்கிலான இருக்கைகள், பக்தர்களை வழிநடத்த ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள், 18 இடங்களில் எல்.இ.டி திரைகள், பக்தர்கள் வருகைக்கும், வெளியேறுவதற்கும் தனித்தழி வழி,  குடிநீர், கழிவறை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எனத் தமிழகம் இதுவரை கண்டிராத மாநாடாக இந்த முருக பக்தர்கள் மாநாட்டு நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்து முருக பக்தர்கள் மாநாட்டுத் திடலில் ஒன்று திரண்டனர். மாநாட்டில் இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ், பாஜக, அதிமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

கார்த்திகை தீபத்திருநாளில் திருப்பரங்குன்றம் மலை மீது மீண்டும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும், பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்த பிரதமருக்குப் பாராட்டு, குன்றம் குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளைக் காக்க வேண்டும், கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறையை வெளியேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.  மாநாட்டின் நிறைவாகக் கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது. மாநாட்டிற்கும் உள்ளேயும் வெளியேயும் கூடியிருந்த ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஒன்று கூடி பாடிய கந்த சஷ்டி கவசம் மதுரை மாநகர் முழுவதும் ஒலித்தது.

எத்தனை எத்தனையோ இடர்பாடுகள், எண்ணிலடங்காத எதிர்ப்புகள் அத்துணையையும் தகர்த்தெறிந்து முருகனின் அருள் பக்தர்களுக்கு என்றைக்கும் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் முருக பக்தர்கள் மாநாடு அமைதியான முறையிலும் அதே நேரத்தில் மிகச்சிறப்பான முறையிலும் நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடும் இடங்களிலேயே பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறிவரும் நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் ஒரு மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாடு என்றே சொல்லலாம்.

Advertisement
Tags :
Advertisement