For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வரியை உயர்த்திய அமெரிக்கா : மின்சாரத்தை துண்டித்த கனடா - இருளில் நகரங்கள்!

09:05 PM Mar 10, 2025 IST | Murugesan M
வரியை உயர்த்திய அமெரிக்கா   மின்சாரத்தை துண்டித்த கனடா   இருளில் நகரங்கள்

கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிபர் ட்ரம்ப் அதிக இறக்குமதி வரியை விதித்துள்ளார். இதன் எதிர்நடவடிக்கையாக அமெரிக்காவுக்கான மின்சாரத்தை கனடா துண்டிக்க திட்டமிட்டுள்ளதால் பல நகரங்களில் மின்கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

சீனா, பிரேசிலுக்கு அடுத்து கனடா உலகின் மூன்றாவது பெரிய நீர் மின் உற்பத்தியாளராக உள்ளது.   உலகின் ஆறாவது பெரிய அணுசக்தி மின்சார  உற்பத்தி நாடாக கனடா உள்ளது. கனடாவின்  மின் உற்பத்தியில்  15 சதவீதம் அணுசக்தி மூலம் கிடைக்கிறது. 17 சதவீத மின்சாரம் கனடாவின்  புதைபடிவ எரிபொருட்களால் உற்பத்தி செய்யப்படுகிறது.

Advertisement

அமெரிக்காவின் வரிவிதிப்பு, மிகவும் முட்டாள் தனமான செயல் என்று குற்றம்சாட்டிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவில் இருந்து வரும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப் போவதாக அறிவித்தார்.   அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 60 சதவீதம் கனடாவிலிருந்து வருகிறது. மேலும் அமெரிக்காவில் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய்யில் ஐந்தில் ஒரு பங்கு கனடாவிலிருந்து வருகிறது.

அமெரிக்காவுக்கு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும்  முக்கிய நாடாக கனடா உள்ளது.   அமெரிக்காவின் மொத்த இயற்கை எரிவாயு இறக்குமதியில் 9 சதவீதம் கனடாவில் இருந்து வருகிறது.  அமெரிக்கா தன் மொத்த மின் தேவைகளில் சுமார் ஒரு சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. கனடா அமெரிக்காவுக்கு மிகப் பெரிய எரிசக்தி வழங்கும் நாடாகும். அமெரிக்காவின் மின்சார இறக்குமதியில் சுமார் 85 சதவீதம் கனடாவிலிருந்து வருகிறது.

Advertisement

அமெரிக்காவின் வட கிழக்கில்  நியூயார்க் மற்றும் நியூ இங்கிலாந்து உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் மின்சாரத்துக்கு கனடாவையே  அதிகம் நம்பியுள்ளன. கனடாவின் ஒன்டாரியோ,கியூபெக்,மணிடோபா,பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களில் இருந்தே அமெரிக்காவுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.

இதற்கிடையே, கனடாவின் ஒன்ராறியோ மாகாண முதல்வர், மிச்சிகன்,நியூயார்க் மற்றும் மின்சோட்டா மாகாணங்களுக்கான மின் விநியோகத்துக்கு 25 சதவீதம் கூடுதல் கட்டணத்தை அமல்படுத்துவதாக அறிவித்திருந்தார். மேலும்,அந்த மாகாணங்களுக்கான மின் விநியோகத்தை முற்றிலும் துண்டிப்பது பற்றி பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்படி மின் விநியோகம் துண்டிக்கப் பட்டால், கனடாவில் இருந்து மின்சாரத் தேவைக்கு கனடாவை  நம்பியுள்ள அமெரிக்க மாநிலங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்று கூறப்படுகிறது.  குறிப்பாக, மிச்சிகன்,நியூயார்க் மற்றும் மின்சோட்டா ஆகிய பகுதிகளுக்கு அதிக பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

நியூயார்க் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் நம்பகமான மற்றும் தடையற்ற மின்சாரம் கனடாவில் இருந்து  வருகிறது. புதிய வரி விதிப்பால்,  மின் கட்டணம் அதிகமாகும்.  மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், மக்களின் வாழ்வாதாரமே பெரிதாக பாதிக்கும்.

ஒன்ராறியோவிலிருந்து வரும் மின்சாரத்தில் பெரும்பகுதி மிச்சிகன் வழியாக கிழக்கு இன்டர்கனெக்ஷனில் உள்ள பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.  கிழக்கே அமெரிக்காவின் பெரும்பகுதி முழுவதும் நீண்டு செல்லும் பெரிய மின் கட்டமைப்பு இதுவாகும்.

புதிய வரி விதிப்பால், மிச்சிகனில் மின்சார கட்டணங்கள் மிக அதிகமாகும் என்றும், மினசோட்டாவில் அதிக மின் கட்டணம் மற்றும் அதிக மின் தடை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, கனடாவின் தொலைத்தொடர்பை மேம்படுத்த எலான்  மஸ்க்கின் SpaceX நிறுவனத்துடன் 100 மில்லியன் டாலர் மதிப்பில் கனடா அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. 15,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் இன்டர்நெட் வழங்கும் இந்த திட்டம், ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒன்ராறியோவில் அமெரிக்க மதுபானங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் கனடாவும் ஆழமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட எரிசக்தி உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. எல்லை தாண்டிய எரிசக்தி வர்த்தகம், இரு நாடுகளுக்கும் கிரிட் நம்பகத்தன்மை மற்றும் பொருளாதார செயல்திறனை உறுதி செய்கிறது.

கனடா மீது வரி விதிப்பது என்பது உண்மையில் அமெரிக்கர்களை அதிகம் பாதிக்கக் கூடிய முடிவு என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement