For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வரி கொள்கை எதிரொலி ; வர்த்தக பற்றாக்குறையை சந்திக்கும் அமெரிக்கா!

09:00 PM Mar 09, 2025 IST | Ramamoorthy S
வரி கொள்கை எதிரொலி   வர்த்தக பற்றாக்குறையை சந்திக்கும் அமெரிக்கா

வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதே வரிக் கொள்கைகளின் நோக்கம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனாலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்கா வர்த்தகப் பற்றாகுறையைச் சந்தித்துள்ளது. இதற்கான காரணம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

ஒரு நாடு ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதி செய்யும் போது வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுகிறது. பொருட்களில் வர்த்தக சமநிலை, பொருட்கள் மற்றும் சேவைகளில் வர்த்தக சமநிலை மற்றும் பரவலாக நடப்புக் கணக்கில் இருப்பு ஆகிய மூன்று அடிப்படைகளில் வர்த்தக பற்றாக்குறை கணக்கிடப்படுகிறது.

Advertisement

வர்த்தக பற்றாக்குறை என்பது, ஒரு நாடு உற்பத்தி செய்வதை விட அதிகமாக பயன்படுத்துகிறது என்பதையும் தன் முதலீட்டு தேவைகளுக்கு நிதியளிக்க உள்நாட்டில் போதுமான அளவு சேமித்து வைக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபரான ட்ரம்ப் அறிவித்த புதிய வரி மற்றும் வர்த்தகக் கொள்கைகள் நாட்டின் இறக்குமதி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இறக்குமதி அதிகரித்ததே அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறைக்கு காரணமாக கூறப்படுகிறது.

Advertisement

ஜனவரியில், அமெரிக்க இறக்குமதிகள் 10 சதவீதம் அதிகரித்து 401.2 பில்லியன் டாலராக உயர்ந்தது. பொருட்கள் இறக்குமதி இதுவரை இல்லாத அளவுக்கு 329.5 பில்லியன் டாலர்களை எட்டியது. இது 12.3 சதவீத அதிகரிப்பாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ட்ரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு கொள்கை நடைமுறைக்கு வருவதற்கு முன், தொழில் நிறுவனங்கள் வேக வேகமாக இறக்குமதியை அதிகரித்துள்ளன.
குறிப்பாக தங்கம் 23.1 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மருந்துகள், செல்போன்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கான தேவை அதிகரிப்பால், நுகர்வோர் பொருட்களின் இறக்குமதியும் 6 பில்லியன் டாலர்கள் வரை அதிகரித்துள்ளது

இதற்கிடையில், முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவீத வருடாந்திர சரிவு கணிக்கப்பட்டுள்ளதும், வர்த்தக பற்றாக்குறை அதிகமாவதற்கு காரணம்.

அமெரிக்காவின் ஏற்றுமதி சந்தை 1.2 சதவீதம் அதிகரித்து 269.8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளன. மொத்த பொருட்கள் ஏற்றுமதி 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது. மக்கள் போக்குவரத்து விமானங்கள் மற்றும் செமி கண்டக்டர்கள் உள்ளிட்ட மூலதனப் பொருட்கள் 4.2 பில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மருந்துகள் மற்றும் நகைகளின் விற்பனை அதிகரித்ததன் காரணமாக நுகர்வோர் பொருட்களின் ஏற்றுமதியும் 1.7 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

ஆனாலும் உணவு ஏற்றுமதிகள் குறைந்துள்ளன. உதாரணமாக சோயாபீன்ஸ் ஏற்றுமதி 1 பில்லியன் டாலர் அளவுக்கு குறைந்துள்ளது. சேவை ஏற்றுமதிகளும் வெகுவாக குறைந்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வர்த்தக பற்றாக்குறையை வரிகள் குறைக்கும் என்று டிரம்ப் கூறிய போதிலும், தரவுகள் வேறுவிதமாக காட்டுகின்றன. சீனப் பொருட்களின் மீதான வரிகள் 20 சதவீதமாக இரட்டிப்பாக்கப்பட்டன. மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 25 சதவீத வரி அறிமுகப்படுத்தப்பட்டது. ட்ரம்பின் இந்த நடவடிக்கைகள், அமெரிக்க வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கு அதிக செலவுகளை ஏற்படுத்தியுள்ளன.

2024 ஆம் ஆண்டில் உலகத்துடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 1.2 டிரில்லியனை எட்டியுள்ளது. டிசம்பர் மாதத்தில் இறக்குமதி 364.9 பில்லியன் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. ட்ரம்பின் புதிய வரி கொள்கை, அமெரிக்க வர்த்தகத்துக்கு எதிராக மற்ற நாடுகளின் பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளன.

சொல்லப்போனால், ட்ரம்பின் வரி கொள்கை, வர்த்தக பற்றா குறையைத் தீர்ப்பதற்குப் பதிலாக அவற்றை அதிகப்படுத்தியுள்ளன.

2017 ஆம் ஆண்டில், முதல் முறையாக ட்ரம்ப் அமெரிக்க அதிபரான காலத்தில், அமெரிக்கா 116 நாடுகளுடன் வர்த்தக பற்றாக்குறையைக் கொண்டிருந்தது. இப்போது இரண்டாவது முறையாக அதிபரான போதும் அமெரிக்கா வர்த்தக பற்றாக்குறையில் உள்ளது.

ஒரு நாடு முதலீடு செய்வதை விட குறைவாக சேமிக்கும் வரை, அதன் சுங்கவரிச் சுவர் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அது வர்த்தக பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்ற உண்மையை இன்னும் ட்ரம்ப் உணரவில்லை என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Advertisement
Tags :
Advertisement