வாடகை வழங்காமல் இழுத்தடிப்பு : புயலில் உதவிய மீனவர்கள் - கைவிட்ட தமிழக அரசு!
பெஞ்சல் புயல் பாதிப்பின் போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கும், படகுகளுக்கும் வழங்கப்பட வேண்டிய தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. வாடகைத் தொகையை எட்டுமாதமாக வழங்காமல் இழுத்தடிக்கும் தமிழக அரசின் மீது மீனவ மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தின் வடமாவட்டங்களை உருக்குலைத்த பெஞ்சல்புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் பாதிக்கப்பட்டவர்களின் நெஞ்சங்களில் நீங்காத துயரத்தை ஏற்படுத்தியது. பல மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் புயலில் சிக்கிக் கொண்டிருந்த போது மீட்புப் பணிகளின் ஒருபகுதியாகச் செயல்பட்ட மீனவர்களுக்கும், அவர்கள் இயக்கிய படகுகளுக்கும் வழங்க வேண்டிய தொகை தற்போதுவரை வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.
மழை, வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்பதற்காக மீனவர்களின் உதவியை நாடிய தமிழக அரசு, அவர்களிடமிருந்தே நூற்றுக்கும் அதிகமான படகுகளையும் வாடகைக்கு எடுத்து இயக்கியது. அதன் ஒருபகுதியாகச் சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் 40க்கும் அதிகமான பைபர் படகுகள் சென்னை மாநகராட்சி மற்றும் மீன்வளத்துறை சார்பாக வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தப்பட்டன.
பைபர் படகுக்கு நான்காயிரம் ரூபாயும், அவற்றை இயக்க இரு நபர்களுக்கு தலா ஆயிரத்தி முந்நூறு ரூபாயும் வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், பெஞ்சல் புயல் கடந்து எட்டு மாதங்களாகியும் அத்தொகை வழங்கப்படவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
மீட்புப் பணியின் போது உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தராத மீன்வளத்துறை, தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையைக் கேட்டால் நாள்தோறும் அலைக்கழிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். பொதுமக்களை ஆபத்துக்காலத்தில் மீட்ட தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தைக் கூட வழங்க மறுப்பது வேதனையாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், ,டிசம்பர் மாதங்களில் பெய்யும் பருவமழையால் ஏற்படும் பாதிப்பின் போது பொதுமக்களை மீட்கும் பணியைச் செய்து வருவதாகவும், கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காமல் அலைக்கழித்து வருவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குடும்பத்தினரை விட்டுவிட்டு பொதுமக்களைக் காக்கச் சென்ற தங்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லாததோடு, படகை எடுத்துச் சென்ற செலவு தான் மிச்சம் எனவும் மீனவர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
அண்மையில் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போது நிதி நெருக்கடியில் அவசர நிலையா எனத் தமிழக அரசைப் பார்த்து நீதிபதிகள் எழுப்பிய கேள்வியை மேலும் உறுதியாக்கும் வகையில் தமிழக அரசின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.
தங்களின் உயிரைப் பணயம் வைத்து பொதுமக்களின் உயிரைப் பாதுகாத்த மீனவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.