For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வாழத் தகுதியற்றதா வடசென்னை?

08:25 PM Jun 20, 2025 IST | Murugesan M
வாழத் தகுதியற்றதா வடசென்னை

எண்ணூர் கோத்தாரி உரத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் உலோகம் கலந்த நச்சுத் துகள்களால் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட அமோனியா கசிவு பாதிப்பிலிருந்தே மீண்டு வராத நிலையில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நச்சு பாதிப்பு குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வடசென்னையின் எண்ணூர், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகள் பெருந்தொழிற்சாலைகளின் மையமாகத் திகழ்கின்றன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், காற்றில் பரவும் விச நச்சுக்கள் என அப்பகுதி மக்கள் உயிர்வாழவே ஒவ்வொரு நாளும் பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில் சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோத்தாரி உரத் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் உலோகம் கலந்த நச்சுத் துகள்கள் புதிய பிரச்சனையை உருவாக்கியுள்ளன.

Advertisement

எண்ணூர் அருகே அமைந்திருக்கும் சத்தியவாணி முத்துநகர், தாழங்குப்பம், நடுக்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்திருக்கும் நச்சுத் துகள்களால் அப்பகுதி மக்கள் தங்களின் நிம்மதியை இழந்து தவித்து வருகின்றனர். காற்றில் கலந்திருக்கும் நச்சுத்துகள்களால் மூச்சுத்திணறல், இருமல், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்வாய்ப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்குளாகி வரும் நிலையில், அது தொடர்பாகத் தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அளித்த புகாரோ  கிடப்பில் போடப்பட்டுள்ளது. வேறு வழியின்றி அப்பகுதி மக்களே நச்சுத்துகள்களை சேகரித்து நடத்திய பகுப்பாய்வில் பல அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

குடியிருப்பு மற்றும் சாலைகளில் காணப்படும் உலோகம் கலந்த நச்சுத் துகள்களில், புளோரைடு, காட்மியம் மற்றும் யுரேனியம் ஆகியவை இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற நச்சுக்களால் இரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு, உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, இதே கோத்தாரி உரத் தொழிற்சாலையில் இருந்து வெளியான அம்மோனியா கசிவு ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னமும் மீண்டு வராத அப்பகுதி மக்கள், தற்போது காற்றில் பரவும் நச்சுத்துகள்களால் நாள்தோறும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

வடசென்னை வளர்ச்சித் திட்டம் எனும் பெயரில் வருடம் தவறாமல் ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகத் தமிழக அரசு ஒருபுறம் கூறிவரும் நிலையில், மற்றொருபுறம் தொழிற்சாலைகளால் மக்கள் படும் பாதிப்பு எல்லையில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது. வாழ்வாதாரத்திற்கே வழியில்லாமல் தவிக்கும் வடசென்னை மக்களுக்கு வளர்ச்சித் திட்டம் என்பது பெயரளவிலேயே இருப்பதாகவும் புகார் எழுந்திருக்கிறது.

Advertisement
Tags :
Advertisement