For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

விடிய விடிய போதை விருந்து : கொத்தாக சிக்கும் பிரபலங்கள்!

08:45 PM Jun 24, 2025 IST | Murugesan M
விடிய விடிய போதை விருந்து   கொத்தாக சிக்கும் பிரபலங்கள்

முதல்முறை கொகைகனை உபயோகிக்க அச்சப்பட்ட ஸ்ரீகாந்த், அடுத்தடுத்து அவரே கேட்டு வாங்கி உபயோகிக்கும் அளவுக்குத் தள்ளப்பட்டிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஸ்ரீகாந்த் வீட்டில் விடிய விடிய நடைபெற்ற போதை விருந்தில் பங்கேற்றவர்கள் யார் யார் ? என்கிற விசாரணையை காவல்துறை தொடங்கியிருக்கும் நிலையில், மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் கேளிக்கை விடுதியில் தகராறு, அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி என பல்வேறு வழக்குகளின் கீழ் கைதாகி குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் தான் அதிமுக முன்னாள் நிர்வாகியான பிரசாத். காவல்துறை நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையின் மூலம் போதைப்பொருள் விற்பனையிலும் பிரசாத்திற்குத் தொடர்பிருப்பது உறுதியானது. பிரசாத்திற்கு எங்கிருந்து போதைப் பொருள் கிடைக்கிறது? யார் யாருக்கு விற்பனை செய்திருக்கிறார் ? என்ற கோணத்தில் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

விசாரணையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள பிரபல நடிகர் ஸ்ரீகாந்திற்கும் தொடர்பிருப்பது உறுதியாக, அவரை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தினர். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் போதைப் பொருள் உட்கொண்டதும் உறுதியானது.

தீங்கிரை எனும் படத்திற்காக  பிரசாத் தனக்கு பத்து லட்ச ரூபாய் பாக்கி தர வேண்டியிருந்ததாகவும், அதனை அடிக்கடி கேட்கப் போய் தனக்கு கொகைன் உபயோகிக்கும் பழக்கத்தை கற்றுத் தந்ததாகவும் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒருமுறை கொகைன் பயன்படுத்தி அதற்கு அடிமையான ஸ்ரீகாந்த், அடுத்தடுத்து பிரசாத்தைத் தொடர்பு கொண்டு அதனை வாங்கி பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.

Advertisement

கடந்த சனிக்கிழமை பிற்பகலில் துபாயில் இருந்து சென்னை திரும்பிய ஸ்ரீகாந்த் தனது இல்லத்தில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அதில் திரையுலகில் உள்ள அவரது நண்பர்கள் பலரும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. பிரசாத் சிறைக்குச் செல்வதற்கு முன்பாக அவரிடம் வாங்கிய 250 கிராம் கொகைனை பயன்படுத்தி அன்று இரவு முழுவதும் பார்ட்டி களைக்கட்டியதாகவும் தெரியவந்துள்ளது. ஸ்ரீகாந்த் இல்லத்தில் விடிய விடிய நடைபெற்ற போதை பார்ட்டியில் பங்கேற்றவர்கள் யார் யார் ? பிரசாத்திடம் போதைப்பொருளை வாங்கியது யார் யார் ? என்ற பட்டியலை காவல்துறை சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

பிரசாத் அளித்த வாக்குமூலத்தோடு அவரின் வங்கிக் கணக்குகளை சோதனை செய்தபோது நடிகர் ஸ்ரீகாந்த் உட்பட பலருடன் பல லட்ச ரூபாய் அளவிற்குப் பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  இதற்கிடையில் கடந்த 17 ஆம் தேதி இரவு சந்தேகத்தின் பெயரில் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் செர்ந்த பிரதீப் குமார் என்ற பிரடோவை காவல்துறையின் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தென் ஆபிரிக்காவில் இருந்து போதைப் பொருள் வரவழைக்கப்பட்டு திரைப்பிரபலங்கள் பலருக்கும் விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. பிரதீப்பிடம் போதைப் பொருள் வாங்கிய நடிகர்களின் பட்டியலிலும் ஸ்ரீகாந்தின் பெயரே பிரதானமாக இடம்பெற்றுள்ளது.

அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தோடு நடிகர் ஸ்ரீகாந்தும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவர்கள் இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்ற கோணத்தில் காவல்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

புகழின் அழுத்தங்கள், படத்தோல்வி, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, கட்டுப்பாடற்ற பழக்கங்கள் ஸ்ரீகாந்தை முழுமையாக போதைப்பழக்த்திற்கு அடிமையாக்கியுள்ளது.  தற்போது ஸ்ரீகாந்த் சிக்கியிருக்கும் நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த, போதைப் பொருட்களை உபயோகிப்பவர்களையும் நெருங்கத் தொடங்கியுள்ளது தமிழகக் காவல்துறை.

Advertisement
Tags :
Advertisement