For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

விண்வெளித்துறையில் "பாகுபலி மொமன்ட்" - CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் - சிறப்பு தொகுப்பு!

07:56 PM Nov 03, 2025 IST | Ramamoorthy S
விண்வெளித்துறையில்  பாகுபலி மொமன்ட்    cms 03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்   சிறப்பு தொகுப்பு

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ் 03-ஐ வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி, இஸ்ரோ மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்....

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ் 03-ஐ , எல்விஎம் 3 எம் 5 பாகுபலி ராக்கெட் உதவியுடன் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு தொடர்ந்து மகுடம் சூட்டி வரும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் புதிய படைப்புக்கு, எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், ராக்கெட் ஏவுதலுக்கான கவுன்ட் டவுன் சனிக்கிழமை மாலை தொடங்கியது.

Advertisement

நேரம் நெருங்க நெருங்க விஞ்ஞானிகள் பரபரப்பாக காணப்பட்டனர். எல்விஎம் 3 எம் 5 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்துவதற்கான முயற்சியில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஹார்ட் பீட் விண்ணை முட்டியது. இறுதியாக வரலாற்று தருணம் நெருங்கியது.... கவுண்ட் டவுன் 3, 2, 1 என நிறைவடைந்ததும் தீப்பிழம்புகளை கக்கியவாறு, எல்விஎம் 3 எம் 5 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

அடுத்தடுத்த நிலைகளை ராக்கெட் வெற்றிகரமாக கடந்த போது, அதனை விஞ்ஞானிகள் விழிப்புடன் கண்காணித்து வந்தனர். மிகவும் சவாலான கிரையோஜெனிக் எஞ்சின் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியதும் விஞ்ஞானிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

Advertisement

சரியான நேரத்தில் ராக்கெட்டில் இருந்து பிரிந்த சி.எம்.எஸ் - 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இஸ்ரோ தலைவர் நாராயணன், சக விஞ்ஞானிகளுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், இந்தியாவின் மிகப்பெரும் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ் 03-ஐ விண்ணில் ஏவும் திட்டம் 100 சதவீதம் வெற்றிபெற்றதாக தெரிவித்தார்.

கடற்படை மற்றும் ராணுவ தகவல் தொடர்புக்காக ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட சிஎம்எஸ் 03 செயற்கைக்கோள், 4 ஆயிரத்து 410 கிலோ எடைகொண்டது. அதிக எடைகொண்ட செயற்கைக்கோளை சுமந்து செல்ல வேண்டும் என்பதற்காக, பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்பட்ட எல்விஎம் 3- எம்5 ராக்கெட் பயன்படுத்தப்பட்டது.

பாகுபலி திரைப்படத்தில் பல்வாள் தேவனின் சிலையை விட அமரேந்திர பாகுபலியின் சிலை, மக்களின் பார்வையில் உயர்ந்து தெரியும். விண்வெளித்துறையில் இந்தியாவின் புகழையும் அப்படித்தான் உயர்த்தியிருக்கிறது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்.

Advertisement
Tags :
Advertisement