For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

விண்வெளியில் வீரர்கள் சந்திக்கும் சவால்கள் : நொறுங்கும் எலும்புகள் - கதிர்வீச்சு!

08:15 PM Jun 27, 2025 IST | Murugesan M
விண்வெளியில் வீரர்கள் சந்திக்கும் சவால்கள்   நொறுங்கும் எலும்புகள்   கதிர்வீச்சு

பூமியில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வது போன்றது அல்ல விண்வெளிப் பயணம். அது முற்றிலும் அசாதாரணமானது. குறிப்பாக விண்வெளியில் உள்ள கதிர்வீச்சு,விண்வெளி வீரர்களின் உடலைப் பாதிக்கும். கதிர்வீச்சினால் என்ன மாதிரியான பாதிப்புக்கள் ஏற்படும் என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

பூமியில் வாழ்வதற்கும், விண்வெளியில் வாழ்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.அதனால் விண்வெளியில் வாழ்வதில் பல சவால்கள் உள்ளன. அந்த சவால்களை எல்லாம் சமாளிக்க, விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்குப் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

Advertisement

விண்வெளியில், ஈர்ப்பு விசை இல்லை என்பதால்,உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதன் காரணமாக,  உடல் ரீதியிலான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க, உடற்பயிற்சி மிகவும் முக்கியம். விண்வெளியில் இருக்கும்போது கண்டிப்பாகத் தினமும் 2 மணி நேரமாவது விண்வெளி வீரர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

பொதுவாகவே, விண்வெளி என்பது  நுண் ஈர்ப்பு விசை உள்ள இடமாகும். விண்வெளிக்குச் சென்றவுடன், விண்வெளி வீரர்களுக்குத் தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புக்கள் ஏற்படும். தலைக்கும் மற்ற உடல் உறுப்புக்களுக்கும் உள்ள ஒருங்கிணைப்பு, சமநிலை மற்றும் இயக்கத்தில் ஏற்படுகிற மாற்றங்களால் இது ஏற்படுகிறது. உடல் நுண் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப இந்த ஒவ்வாத நிலை இரண்டு நாட்களில் சரியாகும்.

Advertisement

உடல் திரவங்கள் மேல்நோக்கி நகர்வதால், முகத்தில் வீக்கம் ஏற்படுகிறது. ஒரு சிலநாட்களில், உடலில் உள்ள  திரவங்கள் சம நிலைக்கு வந்த உடன் முக வீக்கம் குறைகிறது. திரவங்கள் தலையை நோக்கி நகரும்போது, கண்களில் அழுத்தத்தை ஏற்படும். அதனால் பார்வைகளில் பாதிப்பை ஏற்படும். ஒருவேளை பார்வை கூட முழுமையாகப் பாதிக்கப்படலாம். சிலபேருக்குப் பூமிக்குத் திரும்பிய ஒரு ஆண்டுக்குள் பார்வை குறைபாடு ஏற்படலாம்.

கை, கால்களில் தொடர்ச்சியாகப் புவி ஈர்ப்பு விசையின் இறுக்கம் இல்லாததால், தசைகள் மற்றும் எலும்புகளின் எடை விரைவாகவே குறைய ஆரம்பிக்கும். முக்கியமாக, முதுகு, கழுத்து, பின்னங்கால், மற்றும் தொடையிலிருந்து கால் வரையிலான தசை   பாதிப்படைந்து மெலிய ஆரம்பிக்கும். எலும்புகளும் பாதிப்படையும்.  வெறும் 14 நாட்களில் தசைகளின் எடை 20 சதவீதம் குறைந்துவிடும். விண்வெளியில் நான்கு மாதங்கள் வரை தங்கியிருந்தால் தசைகளின் எடை 30 சதவீதம் குறைந்து விடும். ஐந்து மாதங்களில் 40 சதவீத தசையையும் 12 சதவீத எலும்பு நிறைவையும் இழக்க நேரிடும்.

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் செலவிடும் ஒவ்வொரு மாதமும் எலும்பு நிறையில் 2 சதவீதம்  இழக்க நேரும். அதாவது, விண்வெளியில் 6 மாதங்களில், விண்வெளி வீரர்கள் 10 சதவீதம் வரை எலும்பு நிறையை இழப்பார்கள்.  பூமியில், வயதான ஆண்களும் பெண்களும் ஒவ்வொரு ஆண்டும் 1 சதவீத எலும்பு நிறையை இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி எலும்பின் நிறை குறைவது,  எலும்பு முறிவுகளால் பாதிக்கப்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். விண்வெளியில் எலும்பு முறிந்தால்  குணமடையவும் அதிக நேரமாகும்.  பூமிக்குத் திரும்பிய பிறகு,விண்வெளி வீரர்களின்  எலும்பு நிறை இயல்பு நிலைக்குத் திரும்ப நான்கு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.

இதற்காகவே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள், அங்குள்ள ஜிம்மில்  உடற்பயிற்சி சாதனத்தைப் பயன்படுத்தி, உடற்பயிற்சிகள் செய்கின்றனர்.  உடற்பயிற்சிக்காக ஒருநாளைக்கு இரண்டரை மணி நேரம் செலவழிக்கிறார்கள். தொடர்ச்சியான squats  பயிற்சி, Deadlifts,மற்றும் bench press, treadmill மற்றும் Cycling உடற்பயிற்சிகளைச் செய்கிறார்கள்.  தங்கள் எலும்புகளை முடிந்தவரை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஊட்டச்சத்துக்களையும் எடுத்துக் கொள்கின்றனர்.

விண்வெளிப் பயணம் விண்வெளி வீரர்களின் இதயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். விண்வெளியில்,   இதயம் அவ்வளவு கடினமாக உழைக்க வேண்டியதில்லை. ஆகவே பூமிக்குத் திரும்பிய பிறகு, விண்வெளி வீரரின் இதயம் மீண்டும் செயல்படச் சிரமப் படுகிறது.

மேலும், விண்வெளியில் அதிக நாட்கள் தங்கும் விண்வெளி  வீரர்களுக்கு, புற்றுநோய், மத்திய நரம்பு மண்டல பாதிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. கதிர்வீச்சால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், சிவப்பு இரத்த அணுக்களைச் சேதப்படுத்தும். அதனால், இரத்த சோகை ஏற்படும்.

கூடுதலாக, விண்வெளி பயணம் மன ஆரோக்கியத்தைப் பாதிப்பதால், மன அழுத்தம், பதற்றம் மற்றும் அதீத மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். கதிர்வீச்சு, நுண் ஈர்ப்பு விசை, மன அழுத்தம், தனிமை காரணமாக விண்வெளியில் உடலை நோயிலிருந்து பாதுகாக்கும் நோயெதிர்ப்பு மண்டலமும் பாதிக்கப்படும்.

ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்தியாவின் சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களும் 14 நாட்கள் அங்கே தங்கி இருந்து 60 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இதில் இஸ்ரோவின் சார்பில் 7 ஆய்வுகளை சுக்லா மேற்கொள்கிறார்.

ஆக்சியம்-4 விண்வெளிக் குழுவினர் இரண்டு வாரங்கள் மட்டுமே விண்ணில் இருப்பார்கள் என்பதால்  நீண்ட விண்வெளிப் பயணங்களுடன் தொடர்புடைய  உடல்நலப் பிரச்சினைகள் இவர்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement
Tags :
Advertisement