விபத்தில் கேரள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழப்பு!
தருமபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் கேரளா நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்தார்.
கேரளாவைச் சேர்ந்த திரைப்பட நடிகர் சாக்கோ தனது குடும்பத்தினருடன் காரில் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தார்.
தருமபுரி-ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலையில் பாலக்கோடு அடுத்த பாறையூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் நடிகர் சாக்கோவின் தந்தை சிபி சகோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நடிகர் சாக்கோ, அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நடிகரின் தந்தை உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த நடிகர் சாக்கோ மற்றும் குடும்பத்தினரை சிகிச்சைக்காகத் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.