விராட் கோலி உணவகத்தின் அதிக விலை குறித்து நெட்டிசன்கள் கிண்டல்!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடத்தி வரும் உணவகத்தில் விலைப்பட்டியல் வெளியாகிக் காண்போரை மலைக்கச் செய்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு மும்பையின் ஜூகு பகுதியில் உள்ள பிரபல பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களாவை வாங்கி புதுப்பித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி உணவகம் அமைத்தார்.
இந்த உணவகத்தின் பெயரான ஒன் 8 கம்யூன் என்பது விராட் கோலியின் கிரிக்கெட் பயணத்துடன் தொடர்புடையது. அவரது ஜெர்சி எண்ணான 18-ஐ குறிக்கும் வகையிலேயே இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஒன் 8 கம்யூன் உணவக மெனுவின் விலைப்பட்டியல்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. அதில், வெறும் சாதம் 318 ரூபாய்க்கும், பிரியாணி 978 ரூபாய்க்கும், தந்தூரி ரொட்டி 118 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.
இதே போல விராட் கோலியின் தற்போதைய சைவ உணவு முறையைப் பிரதிபலிக்கும் வகையில், விராட் பேவரைட்ஸ் என்ற சிறப்புப் பிரிவும் மெனுவில் அதிக விலையில் இடம் பெற்றுள்ளது.
இந்த விலைப்பட்டியலை கண்ட நெட்டிசன்கள், விராட் கோலியின் உணவகத்துக்குச் சென்றால் ஒரு மாத சம்பளத்தை ஒரு வேளை உணவுக்குக் கொடுக்க வேண்டியது வரும் எனக் கிண்டல் செய்து வருகின்றனர்.