For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

விளைநிலங்களை அழித்து பசுமை வழிச்சாலை? : அரசுக்கு எதிராக கொந்தளிப்பு!

07:55 PM Jun 25, 2025 IST | Murugesan M
விளைநிலங்களை அழித்து பசுமை வழிச்சாலை    அரசுக்கு எதிராக கொந்தளிப்பு

கோவை முதல் சத்தியமங்கலம் இடையிலான தமிழக அரசின் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விளைநிலங்களை அழித்துப் போடப்படும் சாலைத்திட்டத்திற்கான பணிகளை இனியும் தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்திலிருந்து கோவில்பாளையம், அன்னூர் வழியாக ஈரோடு மாவட்டத்தின் புளியம்பட்டி சத்தியமங்கலம் செல்லும் சாலையில் நாள்தோறும் 25 ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்த நிலையில் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

Advertisement

கோவையிலிருந்து திம்பம் வழியாகக் கர்நாடக மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களையும் இணைக்கும் வகையில் மத்திய அரசால் திட்டமிடப்பட்ட புறவழிச்சாலை, மலைப்பகுதி, புலிகள் சரணாலய அறிவிப்பு ஆகியவற்றால் கைவிடப்பட்டது. மத்திய அரசால் கைவிடப்பட்ட சாலையை தற்போது மாநில அரசு பசுமை வழிச்சாலை எனும் பெயரில் அமைக்கத் திட்டமிட்டு வருவதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கோவையில் செயல்படுத்தப்படும் ஏராளமான வளர்ச்சித்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் விவசாயிகள், இந்த பசுமை வழிச்சாலைக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

Advertisement

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையத்தில் தொடங்கி அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை வழியாகக் கர்நாடக எல்லை வரை சென்றடையும் இந்த பசுமை வழிச்சாலையால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

விளைநிலங்களைக் கையகப்படுத்த முடிவுசெய்த தமிழக அரசு, அதற்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கியிருக்கும் நிலையிலும், விரிவான திட்ட அறிக்கையையோ, இத்திட்டத்திற்கான கருத்தறிக்கையையோ விவசாயிகளுக்கு வழங்க மறுப்பதன் மூலம் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

விளைநிலங்களைக் கையகப்படுத்தி சாலை அமைப்பதற்கான பணிகள் இனியும் தொடருமேயானால் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தையும் முன்னெடுக்கவும் தயங்க மாட்டோம் என அப்பகுதியின் ஒட்டுமொத்த விவசாயிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement