For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வேதனையில் பயணிகள் : பேருந்து நிலையத்தை எப்ப சார் திறப்பீங்க?

06:20 PM May 31, 2025 IST | Murugesan M
வேதனையில் பயணிகள்   பேருந்து நிலையத்தை எப்ப சார் திறப்பீங்க

அண்மையில் முதலமைச்சரால் திறப்பு விழா கண்ட பேருந்து நிலையம் ஒன்று இதுவரை மூடப்பட்டே உள்ளது. அது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

பயணிகள் யாருமின்றி, பேருந்துகள் ஏதுவுமின்றி மயான அமைதியுடன் காணப்படும் இதுதான், அண்மையில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம். 2 வாரங்களுக்கு முன்பே திறப்பு விழா கண்டிருந்தாலும், இன்றுவரை இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற கேள்விக்கு நம்பகமான எந்த பதிலும் இல்லை.

Advertisement

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என 2  பேருந்து நிலையங்கள் உள்ளன. இவற்றால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதற்கான கட்டுமான பணிகள் அண்மையில் நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து,  மே 9ஆம் தேதி பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். ஆனால், 3 வாரங்களைக் கடந்த நிலையிலும் இதுவரை அந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

Advertisement

பெயருக்குத் திறப்பு விழா நடத்தப்பட்ட போதிலும்,  குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட  எந்த பணிகளும் முழுமை பெறாமல் உள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதுபோதாதென்று, கடந்த வாரம் பெய்த சிறிதளவு மழைக்கே பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கத் தொடங்கிவிட்டது. இதனால் திருச்சி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை முழுமையாகக் கட்டி முடிக்காமலே, அவசர அவ்வரசமாகத் திறப்பு விழா நடத்தியது ஏன்? எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கி உள்ளனர்.
இது குறித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ஜூன் 3 அல்லது  ஜூன் 14ம்  தேதி பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவித்தார்.

ஆனால், ஜூலை மாதம்தான் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவலும் ஒருபுறம் பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பஞ்சப்பூர்  ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்பது திருச்சி மக்களின் நீண்ட நாள் கனவாகும். ஆனால், அந்த கனவு நனவாவது தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டே உள்ளது.  பஞ்சப்பூரில் இருந்து எப்போது பேருந்துகள் இயக்கப்படும்?, அவசர அவசரமாகத் திறப்பு விழா நடத்தியது ஏன்?, கட்டுமான பணிகள் தரமான முறையில்தான் நடைபெற்றதா? என்பது போன்ற அடுக்கடுக்கான பல கேள்விகள் அணிவகுத்து நிற்கின்றன.

எனவே, அதிகாரிகள் இனியும் தாமதிக்காமல் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பேருந்து நிலையத்தை விரைந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதே திருச்சி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement
Tags :
Advertisement