For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

08:00 PM Nov 03, 2025 IST | Murugesan M
ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் அருகே வெங்கடேஸ்வரச் சுவாமி கோயிலில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, 9 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்ன? பறிபோன உயிர்களுக்கு யார்ப் பொறுப்பு? விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

ஆந்திராவின் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரச் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கார்த்திகை ஏகாதசி நாளையொட்டி அக்டோபர் 31-ம் தேதி நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பூஜைகளைக் காண அங்கு திரளான பக்தர்கள் குவிந்தனர். அப்போது ஆயிரக்கணக்கானோர்க் கூடி நின்ற பகுதியில் திடீரென, பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

Advertisement

இது அங்கிருந்தவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், பக்தர்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் முண்டியடித்துச் செல்ல முயன்றதில் பலர் நிலைதடுமாறி தரையில் விழுந்து மிதிபட்டனர். இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர்ப் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளின் அடிப்படையில், கோயில் வளாகத்தில் ஒரேயொரு நுழைவு மற்றும் வெளியேறும் பாதை இருந்ததாகவும், கூட்ட மேலாண்மைக் குறைபாடுகள் அதிகளவில் இருந்தது தெளிவாக வெளிப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Advertisement

அத்துடன், இந்த விழாவிற்குத் தேவையான அனுமதிகளைக் காவல்துறையிடம் முறையாகப் பெறாமல், கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக ஏற்பாடு செய்ததே இந்தத் துயர சம்பவத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அரசியல் ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தை, எதிர்பாராத மிகுந்த வருத்தமளிக்கும் நிகழ்வு எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகளை வழங்கவும், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தத் துயர நிகழ்வுக்குக் கோயில் நிர்வாகமே முழு பொறுப்பு எனக் குற்றம்சாட்டியுள்ள அவர், கூட்ட மேலாண்மைக் குறைபாடு குறித்து அரசு சார்பில் எச்சரிக்கை விடப்பட்டும் அனுமதி பெறாமல் நிகழ்வு நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். அத்துடன், இந்தச் சம்பவத்தின் முழு விவரங்களையும் வெளிச்சமிட்டுக் காட்ட, ஒரு உயர்மட்ட விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர்ச் சந்திரபாபு நாயுடு கூறினார்.

இந்த விபத்தை அரசின் நிர்வாகத்திறன் குறைபாடால் ஏற்பட்ட அசம்பாவிதம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்தக் கோயில் மாநில அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், அரசு கண்காணிப்பு குறைந்த அளவில் இருந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதேபோல, பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு நிர்வாகங்கள் முறையாக மேற்கொள்ளவில்லை என அதிருப்தி வெளிப்படுத்தியுள்ள எதிர்க்கட்சிகள், இந்தச் சம்பவத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வரும் நிலையில், பாதுகாப்பு குறைபாடுகள் தெளிவாகப் புலப்படுவது மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. மாநிலம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்தத் துயர சம்பவம் தொடர்பாகத் தற்போது மாவட்ட காவல் ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு, நிர்வாகப் பிழைகள் மற்றும் அரசியல் சர்ச்சைகள் என அனைத்தும் ஒரே நேரத்தில் வெடித்துள்ள நிலையில், விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை இந்தச் சம்பவம் ஆந்திர அரசியலின் மைய பிரச்னையாகத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Tags :
Advertisement