For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஹார்வர்ட் Vs ட்ரம்ப் : சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்கு செக்!

07:55 PM May 24, 2025 IST | Murugesan M
ஹார்வர்ட் vs ட்ரம்ப்   சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்கு செக்

சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. சர்வதேச மாணவர்களைப் பாதிக்கும் இந்த உத்தரவை ஏன் அமெரிக்க அரசு எடுத்தது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவில், Ivy League universities என்ற வகையில் 8 தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. (Brown) பிரவுன்,  (Columbia )கொலம்பியா, Cornell கார்னெல், Dartmouth டார்ட்மவுத், Harvard ஹார்வர்ட், Princeton பிரின்ஸ்டன்   Pennsylvania பென்சில்வேனியா மற்றும் Yale யேல் ஆகிய பல்கலைக்கழகங்கள் உலக அளவில் ஆராய்ச்சி படிப்புக்களுக்குப் பெயர் பெற்றவை ஆகும்.

Advertisement

2025 தரவுகளின்படி, உலகளவில் 4 வது சிறந்த பல்கலைக்கழகமாக ஹார்வர்ட் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் வணிகம், கல்வி, பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல், பொது சுகாதாரம், சட்டம், மருத்துவம் மற்றும் கலை மற்றும் மனிதநேயம் உள்ளிட்ட பல பாடங்களில் இளங்கலை, பட்டதாரி மற்றும் தொழில்முறை பட்டப்படிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது.

சர்வதேச புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், இந்தியா,சீனா,தென் கொரியா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட100 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, 6800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 27 சதவீதமாகும்.

Advertisement

ஒவ்வொரு ஆண்டும்  ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 800 ஆகும். இப்பல்கலைக்கழகத்தில் சேரும் இந்திய மாணவர்களுக்கு 100 சதவீத கல்வி உதவித்தொகையையும்  ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழங்குகிறது.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும்,இஸ்ரேலுக்கு எதிராகவும்,ஹார்வடு பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. முன்னதாக, அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்கள், பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் கலந்து கொள்வதாகவும், தேச விரோத கருத்துக்களை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்ததாகவும் அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. தொடர்ந்து, இவ்வாறான தேச விரோத செயல்களில் ஈடுபட்ட 300 சர்வதேச மாணவர்களை உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற உத்தரவிட்டது.

மாணவர்களின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்ற அரசின்  நிபந்தனையை    ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நிராகரித்தது.இதன் விளைவாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கான 19,000 கோடி ரூபாய் நிதியை அமெரிக்க அரசு நிறுத்தியது. அமெரிக்க எதிர்ப்பு, பயங்கரவாதத்துக்கு ஆதரவு என்று பல்கலைக்கழக வளாகத்தில் யூத மாணவர்களைத் தாக்கவும் வன்முறைகளில் ஈடுபடவும் அனுமதி,  சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது என ஹார்வர்ட் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியிருப்பதாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஹார்வர்டின் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக  உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் தெரிவித்துள்ளார். மேலும், ஏராளமான வாய்ப்புகளைக் கொடுத்தும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சட்டத்தைக் கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவாக, தங்கள் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்டச் சான்றிதழை இழந்துள்ளனர்  என்றும் கிறிஸ்டி நோயம் கூறியுள்ளார்.

2025-2026 கல்வியாண்டிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வரும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் பட்டப்படிப்பை முடித்த வெளிநாட்டு மாணவர்கள் பட்டம் பெற அனுமதிக்கப்படுவார்கள் என்று  கூறப்பட்டுள்ளது. இன்னும் பட்டப்படிப்பை முடிக்காத சர்வதேச மாணவர்கள், வேறு பல்கலைக்கழகத்துக்கு மாற வேண்டும், இல்லையெனில், அமெரிக்காவில் தங்குவதற்கான சட்டப்பூர்வ அனுமதியை மாணவர்கள் இழப்பார்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்க அரசு பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், இது பல்கலைக்கழகத்துக்கும் நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம்  கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த நடவடிக்கை , அமெரிக்காவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, பல்கலைக்கழகம் அதன் பாடத்திட்டம், சேர்க்கை நடைமுறைகள் மற்றும் பணியமர்த்தல் கொள்கைகளை மாற்ற முயற்சித்ததாக கடந்த மாதம் அமெரிக்க அரசு, ஹார்வர்ட் மீது வழக்குத் தொடர்ந்தது. நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களை நிச்சயமற்ற நிலையில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Tags :
Advertisement