ஃபெஞ்சல் புயல் - கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் என்ன?
ஃபெங்கல்புயல் இன்று பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து 12 முக்கிய அறிவுரைகளை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில், அவசர தகவலுக்காக செல்போன்களை சார்ஜ் செய்து வைத்து கொள்ள வேண்டும் எனவும், வீடுகளில் உள்ள ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், வானிலை அறிவுப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அத்துடன், அவசர கால பெருட்கள் மற்றும் முதலுதவி பெட்டிகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் உயரமான இடத்திற்கோ அல்லது அரசு முகாமிற்கோ செல்ல வேண்டும் என்றும் அறிவுறித்தியுள்ளது.
வீட்டின் கூரையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும், கால்நடைகள் மற்றும் செல்ல பிராணிகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்சம் ஒரு வார உணவு மற்றும் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.