அசத்தும் ராஜகுரு மோடி : வெளியுறவு கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் - சிறப்பு கட்டுரை!
பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமர் ஆனதிலிருந்தே, நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிற நாடுகளுடனான உறவுகள் மற்றும் சவால்களைக் கையாள்வதில், பிரதமர் மோடியின் ராஜ தந்திரம் வெற்றி பெற்றுள்ளது என்று அரசியல் நிபுணர்கள் பாராட்டுகிறார்கள். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தேசப்பிரிவினைக்கும் மதக்கலவரங்களுக்கும் இடையேதான் சுதந்திர இந்தியா உருவானது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது உலகம் மேற்கு, கிழக்கு என இரண்டு அணியாக பிரிந்தது. பனிப்போர் காலமும் தொடங்கியது. வல்லரசு நாடுகளுக்கிடையேயான பனிப்போரில் பங்கேற்பதில்லை என இந்தியா தனித்து நின்றது.
அதே நேரம், தென்கிழக்காசிய நாடுகளும், பாகிஸ்தானும் சோவியத் யூனியனுக்கு எதிரான அமெரிக்க அணியில் இணைந்திருந்தன. 1947 மற்றும் 1965 ஆண்டுகளில், வலுக்கட்டாயமாக போருக்கு இழுத்த பாகிஸ்தானை இந்தியா வென்றது. 1962 ஆம் ஆண்டில், சீனா இந்தியாவைப் போருக்கு இழுத்தது. பிறகு பின்வாங்கியது.
அந்நேரத்தில், இந்தியா அணிசேரா நாடுகளுக்குத் தலைமை வகித்தது. அமெரிக்காவுடனோ, சோவியத் யூனியனுடனோ நெருங்கிய நட்புறவு கொள்வதை இந்தியா தடுக்கவில்லை. பிரிட்டன் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகளின் கூட்டமைப்பான பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் சேரவும் இந்தியா தயங்கவில்லை.
இந்தியாவின் இந்த அணிசேராக் கொள்கையை அமெரிக்கா வன்மையாகக் கண்டித்து வந்தது. ஆனாலும் சுதந்திரம் அடைந்ததில் இருந்து, எந்த நிா்ப்பந்தத்துக்கும் இரையாகாமல், தன்னிச்சையான வெளியுறவுக் கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது.
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு தொடங்கி, முந்தைய பிரதமர்கள் அனைவரும் அமைத்த வலிமையான அடித்தளத்தின் மீது பிரதமா் மோடி நாட்டின் வெளியுறவுக் கொள்கையை மிகச் சரியாக கட்டமைத்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர்களை விட அதிகமாக வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு வருகிறார்.
2014ம் ஆண்டு தனது முதல் பதவியேற்பு விழாவுக்குத் தெற்காசிய நாட்டுத் தலைவர்களை அழைத்து இந்திய வெளியுறவுக் கொள்கைக்குப் புத்துணர்வு ஊட்டினார் பிரதமர் மோடி.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியப் பெருங்கடல் ரிம் அசோசியேஷன் IROA மற்றும் IOR என்று புதிய அணுகுமுறையை இந்தியா தொடங்கி வைத்தது. மேலும் தென்கிழக்கு ஆசியாவை நோக்கிய இந்தியக் கொள்கைகளை பிரதமர் மோடி புதுப்பித்தார். அதன் விளைவாகவே ஆக்ட் ஈஸ்ட் பாலிசி (AEP) உருவானது.
2016ம் ஆண்டிலிருந்து அமெரிக்க-இந்தியா உறவுகள் மேம்பட்டுள்ளன. அதன் காரணமாகவே, இருநாட்டு ராணுவங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உருவாகியுள்ளன.
வளைகுடா நாடுகளுடனும் இந்தியா வலுவான தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இஸ்ரேலுடனும் ஆரோக்கியமான உறவைப் பலப் படுத்தியுள்ளது. குறிப்பாக,அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய குவாட் அமைப்பு தீவிரமாக செயல்பட இந்தியாவே ஒரு உந்து சக்தியாக உள்ளது.
மோடி 1.0 மற்றும் மோடி 2.0 ஆகியவை சவூதி அரேபியாவிலிருந்து இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் வரையிலும், கத்தார் முதல் எகிப்து வரை உள்ள நாடுகளுடன் இந்தியா உறவுகளை வலுப்படுத்தியது.
புவிசார் அரசியலில், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார பாதை (IMEC), I2U2, International North South Transit Corridor (INSTC) ஆகிய அனைத்தும் கேம் சேஞ்சர்கள் என்று பாராட்டப் படுகிறது. காஸாவில் போர் மற்றும் உக்ரைன் போர் இரண்டையும் முடிவுக்கு கொண்டுவர இந்தியாவால் தான் முடியும் என்று உலகம் நம்புகிறது.
மோடி 3.0 காலத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்யா அதிபர் புதினும் பிரதமர் மோடிக்குத் தருகிற மரியாதை, உலகையே ஆச்சரியப்பட வைக்கிறது.
அமெரிக்க கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ள சக்திவாய்ந்த குழுவாக BRICS அமைப்பு வலுவடைய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையே காரணமாக அமைந்திருக்கிறது.
முதலில் நாஜிகள், பிறகு ரஷ்யர்கள், பிறகு ஜிகாதிகள் என ஒவ்வொரு காலத்திலும் அமெரிக்காவுக்கு ஒரு பெரிய எதிரி இருந்திருக்கிறது. இப்போது அமெரிக்கா, சீனாவை தனக்கு எதிராக தீர்மானித்துள்ளது.
மேலும், சீனாவுக்கு எதிராக இந்தியாவை தன் பக்கம் இழுக்க அமெரிக்கா பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. சொல்லப்போனால், இந்தியா பொருளாதார ரீதியாக அமெரிக்காவுடனும், ராணுவ ரீதியாக ரஷ்யாவுடனும் இணைந்துள்ளது
அமெரிக்காவிற்கு எதிராக ஒருபோதும் பந்தயம் கட்ட வேண்டாம் என்று சொல்வதுண்டு. முதல்முறையாக பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா துணிந்து பந்தயம் காட்டுகிறது .
நிரந்தர நண்பர்களும், நிரந்தர எதிரிகளும் இல்லாத இந்தப் புதிய உலகில், இரண்டாம் உலகப் போருக்குப் பின் எந்த நாடும் செய்யாத சாதனையை எப்போதும் நடுநிலை வகிக்கும் இந்தியா சாதிக்கும் என புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.