அசத்த வரும் ஆப்பிள் : AI ஸ்மார்ட் கிளாஸ் ஏர் போட்கள் - சிறப்பு கட்டுரை!
2027ம் ஆண்டுக்குள் AI மூலம் செயல்படும் மெட்டா போன்ற ஸ்மார்ட் கண்ணாடிகள் மற்றும் கேமராக்கள் கொண்ட ஏர்போட்களை, ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், ஸ்மார்ட் போன் சந்தையில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.
ஆப்பிள் நிறுவனம், தனது மொத்த வருவாயில் 10 சதவீதம், ஆப்பிள் வாட்ச், ஏர்போட் போன்ற அணியக்கூடிய சாதனங்கள் மூலமாக பெறுகிறது.
சாம்சங்கிற்கு பிறகு ஆப்பிள் தனது சொந்த ஸ்மார்ட் வளையத்தை அறிமுகப்படுத்தியது. மேலும் ஸ்மார்ட் கண்ணாடிகள் மற்றும் AI அம்சங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த கேமராக்கள் கொண்ட புதிய ஏர்போட் உருவாக்கி வருகிறது.
2023ம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆப்பிள் விஷன் ப்ரோ சாதனங்கள் , இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் விற்பனைக்கு வந்தன.
ஏற்கனவே Visual Intelligence தொழில்நுட்பத்தில் பல நுாறு கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கும் ஆப்பிள் நிறுவனம், விஷன் ப்ரோ சாதனைகளில் வெற்றி கண்டிருக்கிறது.
விஷன் ப்ரோவில், சுற்றுப்புறங்களை ஸ்கேன் செய்யவும், சுற்றுச்சூழல் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும் உதவும் வகையில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டிருந்தது.
AI அம்சங்களுடன் ஐபோன் உட்பட அனைத்து ஆப்பிள் சாதனங்களில், விஷன் ப்ரோ என்ற Visual Intelligence தொழில்நுட்பத்தை திறம்பட இணைக்கும் ஆராய்ச்சியில் ஆப்பிள் நிறுவனம், நீண்டகாலமாகவே ஈடுபட்டு வருகிறது.
SECOND GENERATION விஷன் ப்ரோ ஹெட்செட்டை தற்போது, உருவாக்கி வருவதாகவும், 2026 ஆம் ஆண்டில் சந்தையில் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, 2027ம் ஆண்டில் ஆப்பிள் ஸ்மார்ட் கிளாஸ் சந்தையில் அறிமுகமாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன், Apple-ன் விஷன் தயாரிப்புகள் குழுவானது Apple Intelligence மூலம் இயங்கும் குறைந்தது நான்கு புதிய சாதனங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறியிருக்கிறார்.
ஆப்பிளில் உள்ள விஷன் ப்ராஜெக்ட் குழு, புதிய ஹெட்செட்கள் மற்றும் அணியக்கூடிய சாதனங்களை உருவாக்குவதில் கடினமாக உழைத்து வருகிறது. குறிப்பாக ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட் செட் அறிமுகத்துக்குப் பின், ஆப்பிள் ஸ்மார்ட் கண்ணாடிகளை தயாரிப்பதில் மும்முரம் காட்டியது.
இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள், ஒருங்கிணைந்த ஸ்பீக்கர்கள் ,AI தொழில்நுட்பத்துடன், உடல் சுகாதாரத்தை கணக்கிடும் அம்சங்கள் மற்றும் சுற்று சூழலை அடையாளம் காணக்கூடிய கேமராக்கள் போன்ற புதுமைகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த கண்ணாடிகள், மெட்டாவின் ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகள் மற்றும் அமேசானின் எக்ஸோ ப்ரேம்கள் போன்றவற்றுக்கு போட்டியாக அமைந்துள்ளன. ஆப்பிள் HARDWARE தொழில்நுட்பத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
கண்ணாடி அணிய விரும்பாதவர்கள் கேமராக்கள் மற்றும் ஹெல்த் சென்சார்கள் கொண்ட ஏர்போட்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சராசரி ஏர்போட்கள் போலிருந்தாலும், சுற்றுச்சூழலை நன்கு புரிந்து கொள்ளும் வகையில் அகச்சிவப்பு (IR) கேமராக்கள் இந்த புதிய ஏர்போட்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இது ஸ்பேஷியல் ஆடியோ போன்ற அம்சங்களை மேம்படுத்துவதற்காக இணைக்கப்பட்டிருக்கிறது.
அதிகாரபூர்வமாக ஆப்பிள் நிறுவனம், இது குறித்து எதுவும் கூறவில்லை என்றாலும், அன்றாட வாழ்க்கையில் மக்களுக்கு பயன்படும் வகையில், பல புதிய சாதனங்களை ஆப்பிள் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.