அஜித் தோவலுக்கு சம்மன் : தேடப்படும் தீவிரவாதி முயற்சியை தடுத்த அமெரிக்க உளவுத்துறை!
தேடப்படும் தீவிரவாதிக்கு எதிராகச் சம்மன் அனுப்புவது வழக்கம். ஆனால், தேடப்படும் தீவிரவாதியே ஒரு நாட்டின் உயர் அதிகாரிக்குச் சம்மன் வழங்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்தத் தேடப்படும் தீவிரவாதி ? எதற்காக ? யாருக்கு சம்மன் அனுப்ப முயற்சி நடந்தது ? என்பதை பற்றி இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement
தடைசெய்யப்பட்ட நீதிக்கான சீக்கியர்கள் (SFJ) அமைப்பின் தலைவராகக் குர்பத்வந்த் சிங் பன்னுன் உள்ளார். அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் இவர், 2007ம் ஆண்டில், இந்த அமைப்பைத் தொடங்கினார்.
இந்தியாவுக்கு எதிராகச் சீக்கிய இளைஞர்களைப் போராட தூண்டுவதே இதன் நோக்கமாகும். சீக்கியர்களுக்கான தனிநாடு "காலிஸ்தான்" கோரிக்கையை முன்வைத்து, இந்தியாவில் பிரிவினையைத் தூண்டும் இந்த அமைப்பு, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. குர்பத்வந்த் சிங் பன்னுன் காலிஸ்தான் என்று தனி நாடு கோரிக்கையை முன்வைத்துப் பல தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
2019ம் ஆண்டு நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகத்தால், 2020ம் ஆண்டு குர்பத்வந்த் சிங் பன்னுன் தேடப்படும் தீவிரவாதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
கடந்த ஜனவரியில் இந்தத் தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. 2023ம் ஆண்டு, அமெரிக்காவில் குர்பத்வந்த் சிங் பன்னுனை படுகொலை செய்ய முயற்சி நடந்தது. இந்திய ஏஜென்ட்கள் தன்னைக் கொலை செய்யச் சதி செய்ததாக பன்னுான் குற்றம்சாட்டினார்.
கடந்தாண்டு, தம் மீதான கொலை முயற்சிக்கு இழப்பீடு கோரி, பன்னுன் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார். இந்திய அரசு உட்பட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அப்போதைய ரா தலைவர் சமந்த் கோயல், ரா ஏஜென்ட் விக்ரம் யாதவ் மற்றும் நிகில் குப்தா ஆகியோருக்கு எதிராகச் சிவில் வழக்கைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பி மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்தியா சம்மனை நிராகரித்ததோடு வழக்கே ஆதாரமற்றது என்று தெரிவித்தது. சென்ற பிப்ரவரி மாதம், பிரதமர் மோடியுடன் அமெரிக்காவுக்குச் தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவலும் பிளேர் மாளிகையில் தங்கியிருந்தார்.
இதற்கிடையே, அஜித் தோவலுக்கு சம்மனை வழங்கவதற்காக, இரண்டு சர்வர்களையும் ஒரு புலனாய்வாளரையும் தனியாக பன்னுன் வேலைக்கு அமர்த்தி இருந்தார். இந்திய தூதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளித்த அமெரிக்க ரகசிய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் அந்தச் சர்வர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மேலும் அங்கு இருந்தால், கைது நடவடிக்கை பாயும் என்று அச்சுறுத்தி வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து, குர்பத்வந்த் சிங் பன்னுனின் வழக்கறிஞர், அஜித் தோவலுக்குச் சம்மன் அனுப்ப முயற்சிக்கும் சர்வரை கைது செய்வதாக அமெரிக்க ரகசிய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் அச்சுறுத்தியதாக நீதிமன்றத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இதனை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், அஜித் தோவலுக்கு சம்மன் வழங்கப்படவில்லை என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த உத்தரவு, பன்னுன் கொலை முயற்சி விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தி உள்ளது.