அடிப்படை தேவைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
அடிப்படை தேவைகள் அனைத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும் பாரபட்சம் இன்றி கிடைக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள தியோசோபிக்கல் சொசைட்டியின் சர்வதேச தலைமையகத்தில் "சுய மாறுதலின் கலை " என்ற தலைப்பில் 149-வது சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஒரு மனிதன் வாழ்வதற்கு அடிப்படை தேவைகளான உணவு, கல்வி, குடிநீர் உள்ளிட்டவை பாரபட்சம் இன்றி கிடைக்க வேண்டும் எனவும் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அந்த இலக்கை அடைய முடியவில்லை எனவும் கூறினார்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான அரசு அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்து வருகிறது எனவும் ஆளுநர் பெருமிதம் தெரிவித்தார்.
அனைவருக்குமான அரசாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக கூறிய ஆளுநர், மனிதர்கள் சார்ந்த வளர்ச்சியை நோக்கி செயல்பட்டு வருவதால் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா மாறியுள்ளது எனவும் குறிப்பட்டார்.
மேலும், அனைவரும் சமம் என்ற இலக்கை நோக்கி செயல்பட வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக் கொண்டார்.