செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அடுத்தாண்டு 4-வது பெரிய பொருளாதார நாடாகும் பாரதம் : ஜப்பானை முந்தும் இந்தியா - சிறப்பு கட்டுரை!

09:05 AM Dec 05, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக அடுத்த ஆண்டிலேயே இந்தியா முன்னேறும் என்று சர்வதேச நாணய நிதியமான IMF கணித்துள்ளது. உலகையே வியக்க வைக்கும் நாட்டின் அதிவேக முன்னேற்றத்துக்கு என்ன காரணங்கள் ? என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

கடந்தாண்டு இந்தியா, பிரிட்டனை முந்தி ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது. இப்போது, இன்னும் 12 மாதங்களில் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாற உள்ளது.

கடந்த ஜனவரியில், டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2047ம் ஆண்டுக்குள் முழுமையான வளர்ச்சியடைந்த இந்தியா என்ற முழக்கத்தை முன் வைத்தார்.

Advertisement

10 ஆண்டுகளுக்கு முன், முதல் முறையாக மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்ற போது, இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சிப்பாதையில் இருந்தது. முதலீட்டாளர்களுக்கு இந்திய பொருளாதாரம் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது.

சுமார் 12க்கும் மேற்பட்ட இந்தியா தொழில் அதிபர்கள் திவாலாகி இருந்தார்கள். இந்திய வங்கிகளின் கடன் கொடுக்கும் திறன் பலவீனமான நிலையில் இருந்தது. ஆனாலும், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த முதல் 10 ஆண்டுகளில், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான ஆழமான அடித்தளத்தை அமைத்தார்.

குறிப்பாக, டிஜிட்டல் மேலாண்மைக்கு பிரதமர் மோடி கொடுத்த முக்கியத்துவம், நாட்டின் பல ஏழை மக்களின் வாழ்க்கையை முன்னேற்றியுள்ளது. ஜன் தன் யோஜனா சேமிப்புத் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 41 ஆயிரத்து 185 கோடி ரூபாய் சேமிப்புடன் சுமார் 53.7 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

நாட்டின் தொலைதூர ஊரில், எங்கோ ஒரு மூலையில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் தொலைபேசிகளில் QR கோடை பயன்படுத்தி, ஒரு பாக்கெட் பாலுக்குக் கூட வெறும் 24 ரூபாய் செலுத்தி பணமில்லா பணப் பரிவர்த்தனை செய்கிறார்கள். தினசரி பொருட்களை வாங்குவதற்கும் டிஜிட்டல் என்பது நடைமுறையாகி உள்ளது.

பொருட்கள் வாங்குவது தொடங்கி, வருமான வரி தாக்கல் செய்வது வரை அனைத்தும் டிஜிட்டல்மயமானது. மேலும், கோடிக்கணக்கான வங்கிக் கணக்குகளை இணைத்ததன் மூலம், நிர்வாகத் துறையில் தேவையற்ற தலையீடு மற்றும் ஊழல் குறைந்துள்ளது.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு மிகப்பெரிய வரி சீர்திருத்தங்களை பிரதமர் மோடி கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினார். சரக்கு மற்றும் சேவை வரி சட்டம்- ஜிஎஸ்டி, பல்வேறு மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து ஒரு பொதுவான தேசிய சந்தைக்கு வழிவகை செய்துள்ளது. அடுத்து, புதிய சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்கள் உருவாக்குவது பிரதமர் மோடியின் பொருளாதாரக் கொள்கையின் மையமாக உள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு, சிதைந்திருந்த பொது உள்கட்டமைப்பை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு சரிப்படுத்தி வருகிறது. இந்தியாவில் எங்கு பார்த்தாலும், கிரேன்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் தொடர்ந்து வேலை செய்து வருகிறது. 2014 மற்றும் 2024 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், கிட்டத்தட்ட 54,000 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது முந்தைய 10 ஆண்டுகளில் போடப்பட்ட சாலை நீளத்தை விட இருமடங்காகும்.

அடுத்த ஆண்டுக்குள், 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளரும் வகையில், வெவ்வேறு துறைகளில் கிட்டத்தட்ட 9,700 திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

2014ம் ஆண்டு, இந்தியாவை உலகின் தொழிற்சாலையாக மாற்றும் மேக் இன் இந்தியா என்ற லட்சியத் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவின் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்காக, செமி-கண்டக்டர்கள் முதல் மொபைல் எலக்ட்ரானிக்ஸ் வரையிலான துறைகளில் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது.

இதன் காரணமாக, பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. குறிப்பாக இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்த ஆண்டு பெரும் சாதனை படைத்துள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாடு மூலம் உற்பத்தி செழிக்கக்கூடிய பொருளாதார சூழலை இந்தியா உருவாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய இளைஞர் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. ஆத்ம நிர்பர் பாரதத்தின் நோக்கத்தை அடைவதற்கு, 1 கோடி இளைஞர்களை ஊக்கப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. உலகின் மூன்றாவது பெரிய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் 42 இடங்கள் முன்னேறி 39 வது இடத்துக்கு உயரந்துள்ளது. மேலும், மத்திய மற்றும் தெற்கு ஆசிய மண்டலத்தில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இது மட்டுமின்றி, குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரக் குழுவிலும் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா அதிக பொருளாதார செல்வாக்கு மிக்க நாடாக ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 2007 ஆம் ஆண்டு இந்திய பங்குச்சந்தை ஒரு லட்சம் கோடி டாலராக இருந்தது. அதுவே , 2017 ஆம் ஆண்டில் இரண்டு லட்சம் கோடி டாலராகவும், 2021 ஆம் ஆண்டு, மூன்று லட்சம் கோடி டாலராகவும் இருந்தது.

கடந்த ஆண்டு நவம்பரில், அதிக பட்ச உச்சமாக நான்கு லட்சம் கோடி டாலர் வர்த்தகத்தை தொட்டு, இந்திய பங்குச்சந்தைகள் அபரிமிதமான வளர்ச்சியைக் காட்டின.

பொருளாதார மந்தநிலையால் அமெரிக்காவில் சில வங்கிகள் மூடப்பட்டன. உக்ரைன் - ரஷ்யா போர், காசா இஸ்ரேல் போர் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம்மிகவும் மோசமடைந்துள்ளன. அதே நேரத்தல், தெளிவான திட்டமிடல், நிலையான வளர்ச்சி என இந்தியாவின் பொருளாதாரம் முன்னேறி கொண்டிருக்கிறது.

நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 5.4 சதவீதமாக வளர்ந்துள்ளது. இந்த நீடித்த வளர்ச்சியே ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அடுத்த ஆண்டு, ஜப்பானின் பொருளாதாரம் 4.31 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்றும், இந்தியப் பொருளாதாரத்தின் அளவு 4.34 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) மதிப்பிட்டுள்ளது.

சப் கா சாத் சப் கா விகாஸ் என்று சர்வதேச ஒத்துழைப்புக்கான அர்ப்பணிப்புடன், இந்தியா வளர்ந்து வருவதை உலகம் காண்கிறது. இனி வருங்காலங்களில், உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியா தலைமை ஏற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Tags :
International Monetary Fundworld's fourth largest economy. InvestorsFEATUREDMAINPM ModiIndiajapanIndian Economy
Advertisement