அடுத்த 5 ஆண்டுகளில் 85,000 மருத்துவ படிப்பு இடங்கள் உருவாக்கப்படும் - அமித் ஷா உறுதி!
அடுத்த 5 ஆண்டுகளில் 85 ஆயிரம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் சேர்க்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Advertisement
ஹரியானா மாநிலம், ஹிசாரில் உள்ள மகாராஜா அக்ரசென் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மோடி அரசு 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்டுள்ளது எனவும், அவர்களுக்கு தங்குமிடம் வழங்க நான்கு கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
முன்பு மருத்துவ மாணவர்களுக்கு 51 ஆயிரம் இடங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அது 1 லட்சத்து 15 ஆயிரம் இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமித்ஷா கூறினார். மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் 85 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்படும் எனவும் கூறினார்.
ஹரியானாவில் முன்னர் சாதிய வேறுபாட்டால் அரசு வேலைகள் வழங்குவதில் ஊழல் நடைபெற்றதாகவும் பாஜக ஆட்சியில் ஹரியானாவில் 80 ஆயிரம் வேலைகளை வழங்கி சாதி அடிப்படையில் அரசியல் செய்யப்படுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்டது எனவும் அமித்ஷா தெரிவித்தார்.